
திருவனந்தபுரம்: ஹிமாச்சலில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் பிரபல மலையாள நடிகை ஒருவர் சிக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவின் பிரபல நடிகை மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பின் முதல் மனைவியான இவர் அங்கு பிரபல நடிகை ஆவார். சமீபத்தில் தமிழில் நடிகர் தனுஷுடன் "அசுரன்" என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இவர் தற்போது 'கைட்டம்' என்ற மலையாளப் படத்தின் படப்பிடிப்பிற்காக இயக்குநர் சனல் சசிதரன் உள்ளிட்ட 30 பேர் அடங்கிய படக்குழுவுடன் ஹிமாசலில் தங்கியுள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக இவர்கள் அங்கு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஹிமாச்சலில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் மஞ்சு வாரியர் சிக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
திங்கள் மாலை மஞ்சு தனது சகோதரர் மதுவுடன் சேட்டிலைட் போன் ஒன்றின் மூலமாக பேசிய பிறகுதான் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் தெரிவித்த மது, ' மனு வாரியர் மற்றும் படக்குழுவினர் சட்ரு என்னும் கிராமத்தில் தங்கியுள்ளதாகவும், அங்கு தொலைத்தொடர்பு முற்றிலும் செயல் இழந்துள்ளதாகவும் தெரிவித்தார். மிக குறுகிய நேரமே பேசிய மஞ்சு அங்கே மேலும் சிலர் சிக்கி இருப்பதையும் தெரிவித்ததாக கூறினார்.
மஞ்சு ஹிமாச்சலில் சிக்கியிருப்பதை உறுதி செய்த கேரளாவைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன், தான் இதுதொடர்பாக ஹிமாச்சல் மாநில முதல்வர் ஜெய் ராம் தாக்கூரிடம் பேசியுள்ளதாகத் தெரிவித்தார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.