
சென்னை: பிரபல இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது படமான 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' வின் ட்ரைலர் புதனன்று வெளியாகியுள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் "நீலம் புரடொக்ஷன்ஸ்" மூலமாக முதலில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ’பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரித்திருந்தார். அதையடுத்து நீலம் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு"
‘அட்டக்கத்தி’ தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தினை, இயக்குநர் பா.இரஞ்சித்தின் உதவியாளரான அதியன் ஆதிரை இயக்கியுள்ளார்.. கதாநாயகியாக பிக்பாஸ் சீஸன் 2’வில் ஜெயித்தவரான ரித்விகா நடித்துள்ளார்.
"தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்" மற்றும் "மகிழ்ச்சி" ஆகிய ஆல்பங்களின் இசையமைப்பாளரான தென்மா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். "கபாலி", " காலா" ஆகிய படங்களின் கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றுகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு ஜனவரி 3-ஆம் தேதி துவங்கியது. விரைவாக படப்பிடிப்பு முடிந்த நிலையில்படத்தின் 'மோஷன் போஸ்ட்டர்’ இரு நாட்களுக்கு முன்பாக வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.