Enable Javscript for better performance
No Time To Die James Bond is back in Screens | நோ டைம் டு டை படத்தின் டீஸர்!- Dinamani

சுடச்சுட

  

  புத்தம் புதிதாக வருகிறார் உங்கள் நேசத்துக்குரிய ஜேம்ஸ் பாண்ட்! நோ டைம் டு டை படத்தின் டீஸர்!

  By Uma Shakthi  |   Published on : 02nd December 2019 02:42 PM  |   அ+அ அ-   |  

  007

  James Bond

  விரைவில் வரவிருக்கும் ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டு டை (No Time To Die) படக்குழுவினர் புதிய டீஸர் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  இப்படத்தின் முழு டிரெய்லர் டிசம்பர் 4 புதன்கிழமை வெளிவரும் என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளார்கள்.  நடிகர் டேனியல் கிரெய்க் இதற்கு முன்னர் 2006-ம் ஆண்டில் கேசினோ ராயல் மற்றும் 2015-ம் ஆண்டில் வெளியான ஸ்பெக்டர் படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ளார். சிறிய இடைவெளிக்குப் பிறகு, 'நோ டைம் டு டை’யில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அவர் ஏற்று நடித்திருப்பது ரசிகர்ளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

  இயன் ஃப்ளெமிங் 1953-ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை முதன்முதலில் உருவாக்கியதிலிருந்து இன்றுவரை, திரைப்படம் மற்றும் இலக்கியத்தில் ஜேம்ஸ் பாண்ட் தவிர்க்க முடியாத பேருருவமாக இருந்து வருகிறார். பிரிட்டிஷ் ரகசிய சேவையில் ஒற்றனாகவும், பெண் பித்தனாகவும் அறியப்படும் பாண்ட் கதாபாத்திரத்தை இயன் ஃப்ளெமிங் தான் சந்தித்த வெவ்வேறு மனிதர்களின் குணாதியங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கினாராம்.  உலகப் போரின் போது கடற்படை புலனாய்வுப் பிரிவு 2-ல் பணி புரிந்தவர் ஃப்ளெமிங் என்பது குறிப்பிடத்தக்கது.  சீன் கானரி மற்றும் பியர்ஸ் ப்ரோஸ்னன் இருவரும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் அட்டகாசமாகப் பொருந்தக் கூடியவர்கள்தான் என்றாலும், டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டின் மறு அவதாரம் என நினைக்கக் கூடிய அளவுக்கு கன கச்சிதமாக இருப்பவர் என்று பல ரசிகர்கள் கூறியுள்ளனர்.

  தற்போது, பாண்ட் வரிசையில் வரவிருக்கும் 25-வது படத்தின் புதிய டீஸரான நோ டைம் டு டை யூடியூப்பில் வந்துள்ளது. இந்த டீஸர் ரசிகர்களுக்கு அதிக தகவல்களைத் தரவில்லை என்றாலும், விதவிதமான அழகான இடங்களில், ஆடம்பரமான கார்களுடன் பாண்டைப் பார்க்க முடிகிறது.  முழுமையான ட்ரெய்லர்  இன்றிலிருந்து மூன்றே நாட்களில், அதாவது டிசம்பர் 4 புதன்கிழமை அன்று வெளியாகும் என்பதை டீஸர் தெரிவிக்கிறது.  

  இதுவரை படமாக்கப்பட்ட  ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எல்லாமே பிரமாண்டத்துடன் கூடிய மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால், நோ டைம் டு டை இதற்கு விதிவிலக்கல்ல. டேனியல் கிரெய்கை  அட்டகாசமான பின்னணியில் களம் இறக்கியுள்ளார் இயக்குனர். ராமி மாலிக் வில்லனாக நடிக்கும் இப்படத்தில், கிரெய்கின் ஓபனிங் முந்தைய பாண்ட் படங்களிலிருந்து மிகவும் வித்யாசமாக இருக்கும்.  நோ டைம் டு டை திரையரங்குகளில் வரும் போது ரசிகர்கள் சரவெடியுடன் கூடிய வெடிகுண்டு பயணத்தை எதிர்பார்க்கலாம்.

  2005 ஆம் ஆண்டில் கேசினோ ராயல் படத்திற்காக முதன்முதலில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரெய்க் நடித்தபோது,  இயன் ஃப்ளெமிங்கின் புத்தகங்களில் நீளமாக விவரிக்கப்பட்ட அந்த ஜேம்ஸ் பாண்டை திரையில் பார்க்க முடியவில்லை என சில ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அனேக ரசிகர்களுக்கு அவரது ஜேம்ஸ் பாண்ட் தோற்றம் பிடித்திருந்தது. இம்முறை ஜேம்ஸ் பாண்டின் அசல்தன்மையை டேனியல் கிரெய்க் பிரதிபலிக்க மாட்டார். ஜேம்ஸ் பாண்ட் வழக்கமாகச் செய்யும் சேட்டைகளை, தந்திரங்களை எல்லாம் இந்தப் படத்தில் செய்யப் போவதில்லை என்கிறது ஹாலிவுட் வட்டாரம். 

  லஷானா லிஞ்ச் இந்தப் படத்தில் கிரெய்குக்கு மாற்றாக புதிய பெண் 007 ஆக அசத்துவார் என்றும் சில தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில், இந்த வதந்திகளை லஷானா லிஞ்ச் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, எனவே தற்போது அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் என்று யாருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. ஆனாலும், ஒன்று மட்டும் நிச்சயம்: பாண்ட் யாராக இருந்தாலும் சரி, வரும் புதன்கிழமை அன்று முழு ட்ரெய்லரைப் பார்க்க உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  TAGS
  james bond
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai