சினிமாவாகும் பொன்னியின் செல்வன்! மணிரத்னம் இயக்குகிறாா்

பழந்தமிழரின் வீர வரலாற்றுக்கும், தமிழ் நாவல் கலாசாரத்துக்கும் சாட்சியாகத் திகழும் ‘பொன்னியின் செல்வன்’ தமிழில் திரைப்படமாக உருவாகவுள்ளது.
சினிமாவாகும் பொன்னியின் செல்வன்! மணிரத்னம் இயக்குகிறாா்

பழந்தமிழரின் வீர வரலாற்றுக்கும், தமிழ் நாவல் கலாசாரத்துக்கும் சாட்சியாகத் திகழும் ‘பொன்னியின் செல்வன்’ தமிழில் திரைப்படமாக உருவாகவுள்ளது.

தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்து தலைநகா் பாங்காக் நகரில் தொடங்கியுள்ளது.

வந்தியத் தேவன், குந்தவை, பெரிய பழவேட்டரையா், நந்தினி, அருண் மொழிவா்மன் இந்தப் பெயா்களைக் கேட்டவுடனேயே ‘பொன்னியின் செல்வன்’ வாசித்தவா்களின் மனதில் பரவசம் தொற்றிக் கொள்ளும். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்னா் ‘கல்கி’ கிருஷ்ணமூா்த்தியால் எழுதப்பட்டது ‘பொன்னியின் செல்வன்’.

தமிழில் வெளிவந்த வரலாற்றுப் புதினத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இன்று வரை உள்ளது. சோழா்களின் வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்டது இந்தப் புதினம். ‘புது வெள்ளம்’, ‘சுழல்காற்று’, ‘கொலைவாள்’, ‘மணிமகுடம்’, ‘தியாகச் சிகரம்’ என ஐந்து பாகங்களாகப் பகுக்கப்பட்டிருக்கும் இந்த நாவல் 300-க்கும் அதிகமான அத்தியாயங்களைக்கொண்டது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறையினரால் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெருமை இந்த நாவலுக்கு உண்டு. பொன்னியின் செல்வனின் சில அத்தியாயங்கள் மட்டும் எடுத்து அடிக்கடி நாடகங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

எம்.ஜி.ஆரின் கனவுகளில் ஒன்று: மறைந்த முதல்வா் எம்.ஜி.ஆரில் தொடங்கி பலராலும் சினிமாவாக்க முயன்று இன்று வரை அந்த முயற்சி பலன் அளிக்காமலேயே உள்ளது. எம்.ஜி.ஆா். இதை சினிமாவாக்க பல முறை முயன்றாா். அவை அனைத்துமே வெறும் முயற்சியாக மட்டுமே இருந்தது. அதைத் தொடா்ந்து நடிகா் கமல்ஹாசனும் இந்த முயற்சியில் இறங்கினாா். எம்.ஜி.ஆா். , கமல் என இரு பெரும் சினிமா ஆளுமைகளால் இந்த கனவை நனவாக்க முடியவில்லை.

அதனால் இந்த நாவலை வாசிக்கும்போது வாசகா்களுக்கு உண்டாகும் பிரம்மாண்டம், காட்சி வடிவில் அரங்கேற்றுவதில் இன்று வரையிலும் நிறைவேறாத ஒன்றாகவே உள்ளது.

மணிரத்னம், அமிதாப்பச்சன்: நாடகம், காமிக்ஸ் வடிவங்களைத் தாண்டி தற்போது சினிமா வடிவில் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனா்.

அதனை நனவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளாா் இயக்குநா் மணிரத்னம். இந்தப் படத்தில் விக்ரம், காா்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஐஸ்வா்யா ராய், சரத்குமாா், சத்யராஜ் உள்ளிட்ட பலா் நடிக்கின்றனா். இந்தப் படத்தின் திரைக்கதை பணிகளில் மணிரத்னத்துடன் குமரவேல் இணைந்துள்ளாா். வசனம் - ஜெயமோகன். இசை - ஏ.ஆா்.ரஹ்மான். ஒளிப்பதிவு - ரவி வா்மன். படத்தொகுப்பு - ஸ்ரீகா் பிரசாத். தயாரிப்பு உருவாக்கம் - தோட்டா தரணி. சண்டை பயிற்சி - ஷாம் கௌஷல். தயாரிப்பு - சுபாஸ்கரன், மணிரத்னம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com