வனிதா விஜயகுமாரிடம் வசிக்க மகள் விருப்பம்: முடிவுக்கு வந்த கடத்தல் வழக்கு!

தனது தாயுடன் வசிக்க விரும்புவதாக நடிகை வனிதா விஜயகுமார் மகள் ஜெனிதா, தெலங்கானா மாநில மனித உரிமைகள் ஆணையத் துணைத் தலைவரிடம்...
வனிதா விஜயகுமாரிடம் வசிக்க மகள் விருப்பம்: முடிவுக்கு வந்த கடத்தல் வழக்கு!

தனது தாயுடன் வசிக்க விரும்புவதாக நடிகை வனிதா விஜயகுமார் மகள் ஜெனிதா, தெலங்கானா மாநில மனித உரிமைகள் ஆணையத் துணைத் தலைவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று திடீரென ஏற்பட்ட சர்ச்சைக்கு முடிவு கிடைத்துள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார் தனது மகளைக் கடத்தியதாக அவருடைய 2-வது கணவரான ஆனந்த்ராஜ், தெலங்கானா காவல்துறையிடம் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். இதையடுத்து வனிதா விஜயகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதல் திருமணம் விவாகரத்து ஆன பிறகு ஆனந்த்ராஜை 2007-ல் திருமணம் செய்தார் வனிதா. பிறகு இவர்களுக்கு ஒரு மகள் இருந்த நிலையில் 2012-ல் ஆனந்த்ராஜையும் வனிதா விவாகரத்து செய்தார். 2-வது கணவரைப் பிரிந்த வனிதா, தனது மகள் ஜெனிதாவைப் பார்க்க ஹைதராபாத்துக்குச் சென்றுள்ளார். அப்போது, மகளை யாருக்கும் தெரியாமல் அழைத்துவந்துவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து வனிதா மீது காவல்துறையிடம் புகார் அளித்தார் ஆனந்த்ராஜ். வனிதா விஜயகுமாருக்கு நிரந்தர முகவரி இல்லாததால் அவரைத் தேடுவதில் சிரமம் ஏற்பட்டதாக ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார். 

வனிதா, தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் வனிதா விஜயகுமாரையும் அவருடைய மகளையும் தேடிவந்த தெலங்கானா காவல்துறை தமிழகக் காவல்துறையின் உதவியை நாடியது. நசரத்பேட்டை காவல்துறை உதவியுடன் தெலங்கானா காவலர்கள், வனிதா விஜயகுமாரிடம் விசாரணை நடத்த பூந்தமல்லியில் ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள பிக் பாஸ் அரங்கத்துக்கு நேற்று சென்றார்கள். 

வனிதா விஜயகுமாரிடம் மகள் கடத்தல் வழக்கு தொடர்பாக 2 மணி நேரத்திற்கும் மேலாக தெலங்கானா காவலர்கள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு வனிதாவின் மகள் ஜெனிதா பிக் பாஸ் அரங்குக்குள் வரவழைக்கப்பட்டார். தெலங்கானா மாநில மனித உரிமைகள் ஆணையத் துணைத் தலைவர் வசுந்தரா, வனிதாவின் மகளிடம் பேசினார். அவர் கடத்தப்பட்டாரா,  யாருடன் வசிக்க விருப்பம் என்கிற கோணத்தில் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது, தன் தாய் வனிதாவுடன் வசிக்க விரும்புவதாக ஜெனிதா கூறியுள்ளார். இதையடுத்து வனிதாவுடன் ஜெனிதா வசிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட சிக்கல் சுமூகமாக முடிந்த நிலையில் வனிதா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். 

வனிதாவின் வழக்கறிஞர் ஸ்ரீதர், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தெலங்கானா காவல்துறையினர் ஒருதலைபட்சமாகத்தான் நடந்துகொண்டார்கள். நீதிமன்றம் கேட்டுக்கொண்டால் நீதிமன்றத்துக்கு ஜெனிதாவை அழைத்து வருகிறோம். இப்படி எந்த வாரண்ட்டும் இல்லாமல் பிக் பாஸ் அரங்குக்குள் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று கூறினோம். பிக் பாஸிலிருந்து வனிதா வெளியே வந்த பிறகு தெலங்கானா காவல்துறை மீது மனித உரிமை ஆணையத்தில் புகாரளிப்போம் என்று பேட்டியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com