அமிதாப் கதாபாத்திரத்தில் ஜொலிப்பாரா அஜித்? சாதிக்குமா நேர்கொண்ட பார்வை

இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் தமிழில் 'நேர் கொண்ட பார்வை’?
அமிதாப் கதாபாத்திரத்தில் ஜொலிப்பாரா அஜித்? சாதிக்குமா நேர்கொண்ட பார்வை

இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் தமிழில் 'நேர் கொண்ட பார்வை’ ஆக உருவாகி ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. எவ்வித சமரசங்களும் இன்றி பெரும் பரபரப்பை கிளப்பிய படம் பிங்க். இப்படம் பேசப்பட்டதன் அதன் கதை என்றாலும் அமிதாப் பச்சனின் நடிப்பு அப்படத்தின் வெற்றியை உறுதி செய்தது. பிங்க் படத்தின் நீளம் 136 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு அது போதாது என்று உணர்ந்த இயக்குநர் வினோத், அஜித்துக்கான காட்சிகளை அதிகரித்து திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்துள்ளார். பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்துக்கு ஜோடி கிடையாது. ஆனால் NKP-வில் அஜித்தின் ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். ரங்கராஜ் பாண்டே, கல்கி கொச்லின், ஷரத்தா ஶ்ரீநாத், பிக்பாஸ் 3 புகழ் அபிராமி, உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் வெளியான நாள் முதல் தற்போது வரை அதிக பார்வையாளர்களைப் பெற்று வைரலாகி வருகிறது. இப்படத்தில் தல ரசிகர்களை திருப்திபடுத்துவதற்காகவும் காதல் காட்சிகளும், சண்டைக்காட்சியும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் அஜித் தோன்றும் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்றனர் படக்குழுவினர். நேர்கொண்ட பார்வை படத்துக்கு அண்மையில் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்தது.

பாடல்கள்

பிங்க் படம் படு சீரியஸான கதையுடன் விறுவிறுப்புடன் இருக்கும். அப்படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. யுவன் ஷங்கர் ராஜா இசையில் நேர் கொண்ட பார்வை படத்தின் முதலிரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,  'தீம் சாங்'  என்ற அறிமுகத்துடன் தீ முகம்தான் என்ற பாடல் வெளியாகி ரசிக்கப்பட்டது. மேலும் இன்னொரு பாடலான அகலாதே என்ற பாடலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. இது வேற லெவல் என்று அஜித் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். அகலாதே பாடலில் அஜித் மற்றும் வித்யா பாலனின் புகைப்படங்கள் அன்பையும் அதீதக் காதலையும் வெளிப்படுத்தும்விதமாக அமைந்திருந்தது. இதில், அஜித் தாடி இல்லாமல் இருக்கிறார். ஆனால் படத்தின் மற்ற காட்சிகளில் அவருடைய அக்மார்க் ஸ்டைலான பெப்பர் அண்ட் சால்ட் தாடி மீசையுடன் அழகாக காட்சியளிக்கிறார். இதன் மூலம் அஜித் இரண்டு விதமான கெட்டப்புக்களில் தோன்றுவார் என்று தெரிகிறது. ஒன்று வக்கீல் அஜித் மற்றொன்று ப்ளாஷ்பேக் காட்சியில் தோன்றும் அஜித்.

நடிப்பு

சமூகத்தில் பெண்கள் மீதான வன்முறையையும், பாலியல் வன்கொடுமைகளையும் மிக அழுத்தமாக பதிவு செய்த படம் பிங்க். பெண் மையப் படமான இதில் அமிதாப் நடிக்க முன்வந்தது கதையின் மீதும், சமூகத்தின் மீதும் முக்கியமாக பெண்கள் மீதும் அவருக்கு இருந்த மரியாதையை கூறும் வண்ணம் இருந்தது. திரையில் குறுகிய கால அவகாசம் மட்டுமே வரக் கூடிய கதாபாத்திரமாக இருந்தாலும், அதன் முக்கியத்துவம் உணர்ந்து  அப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தமிழில் அஜித் அந்த கதாபாத்திரத்தை ஏற்கவிருக்கிறார் என்றதும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. அதற்கேற்ற வகையில் டீஸரில் வெளியான காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

சர்ச்சைகள்

இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என்று முன்பு கூறப்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீஸ் தேதி என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியானதிலிருந்து சில பிரச்சனைகள் எழுந்தன. அஜித் இப்படத்தில் குறைவான காட்சிகளில் நடித்துள்ளார் என்றும், அதனால், தான் இப்படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை என்றும் நம்பப்பட்ட நிலை மாறி அஜித்துக்கான சண்டைக் காட்சிகள் மற்றும் ப்ளாஷ்பேக் காட்சிகள் உருவாக்கப்பட்டன.

தற்போது படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் படத்தை மொத்தமாக வியாபாரம் செய்யாமல், ஒவ்வொரு ஏரியாவிற்கும் பகுதி வாரியாக பிரித்து கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜெமினி படத் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்ட தொகையை கொடுத்து படத்தை வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே ஜெமினி நிறுவனம் வியாபாரரீதியாக சில பிரச்னைகளில் உள்ளது என்பதால் இப்படத்தை ரிலீஸ் செய்வதில் ஏதேனும் சிக்கல்கள் உருவாகலாம். ஆனால் ரசிகர்கள் இப்படத்தை குறித்த நேரத்தில் வெளியிட்டுவிடுவார்கள் என்று நம்புகிறார்கள். தல அஜித்தின் வித்யாசமான இந்தப் படத்தைப் பார்க்க அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் பார்த்து மகிழ ஆவலாக உள்ள நிலையில் விநியோகஸ்தர்கள் ஜெமினி நிறுவனத்துக்கு அழுத்தம் தந்தால் பட ரிலீஸ் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து போனி கபூர், இயக்குனர் வினோத் மற்றும் அஜித் கூட்டணி மீண்டும் இணையலாம் என்ற தகவல் கோலிவுட் வட்டாரங்கள் கசிந்துள்ளது. அடுத்து வருவது அஜித்தின் 60-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com