பன்முகக் கலைஞர் கிரீஷ் கார்னாட் மறைவு

பன்முகக் கலைஞர் கிரீஷ் கார்னாட் மறைவு

ஞான பீட விருது பெற்ற பன்முகக் கலைஞர் கிரீஷ் கார்னாட் உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானார்.

ஞான பீட விருது பெற்ற பன்முகக் கலைஞர் கிரீஷ் கார்னாட் உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிப்பதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
 எழுத்தாளர், நாடகக் கலைஞர், நடிகர், திரைப்பட இயக்குநர், முற்போக்கு சிந்தனையாளர் என்று பன்முகம் கொண்ட கிரீஷ் கார்னாட் (81), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
 இந்த நிலையில், பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை மரணமடைந்தார். இவருக்கு மனைவி சரஸ்வதி, மகன் ரகு கார்னாட், மகள் சால்மொழி ராதா கார்னாட் ஆகியோர் உள்ளனர்.
 எளிமையாக இறுதிச் சடங்கு: கிரீஷ் கார்னாட்டின் விருப்பப்படியே, அவரது உடலுக்கு மாலை, மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்த முக்கியப் பிரமுகர்கள் யாரையும் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை.
 நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் உடலை காண அனுமதிக்கப்பட்டனர். வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், தகனம் செய்யப்படுவதற்கு முன்பாக கல்பள்ளி மயானத்தில் வைக்கப்பட்டிருந்தது.
 அப்போது அமைச்சர் டி.கே.சிவகுமார், பெங்களூரு மேயர் கங்காம்பிகே உள்ளிட்ட சிலர் மட்டும் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது உடல் எந்தவித மதச்சடங்குகள், அரசு மரியாதைகளும் இன்றி, எளிய முறையில் தகனம் செய்யப்பட்டது.
 ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர்கள் மறைவு எய்தியபோது கடைப்பிடித்த அதே மரபில் கிரீஷ் கார்னாடின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யவிருப்பதாக முதல்வர் குமாரசாமி அறிவித்திருந்தார். எனினும், அரசின் அறிவிப்பை கிரீஷ் கார்னாடின் மகன் ரகு கார்னாட் மறுத்துவிட்டார்.
 வாழ்க்கைக் குறிப்பு: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மாதேரன் கிராமத்தில் டாக்டர் ரகுநாத் கார்னாட்-கிருஷ்ணாபாய் மண்கிகார் தம்பதிக்கு மகனாக 1938-ஆம் ஆண்டு மே 19-இல் பிறந்தவர் கிரீஷ் கார்னாட். ஆரம்பக் கல்வியை மராத்திய மொழியில் பயின்ற அவர், கர்நாடக மாநிலம் சிர்சியில் குடியேறினார்.
 நாடகம், தெருக்கூத்து, யக்ஷனா போன்ற கலைகளின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர் இவரது குடும்பம் கர்நாடக மாநிலம் தார்வாடுக்கு குடிபெயர்ந்தது. அங்கு கணிதம், புள்ளியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிறகு லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல், பொருளாதாரம் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். அந்தப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராகவும் இருந்தார்.
 பல்வேறு விருதுகளைப் பெற்றவர்: கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும், ஏராளமான நாடகங்களிலும் கிரீஷ் கார்னாட் நடித்திருக்கிறார்.
 இவருக்கு 1998-ஆம் ஆண்டில் ஞானபீட விருது, 1974-இல் பத்மஸ்ரீ, 1992-இல் பத்மபூஷண் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
 கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய புதினம் "சம்ஸ்காரா'வை 1970-இல் திரைப்படமாக எடுத்து, கன்னடத் திரையுலகில் கிரீஷ் கார்னாட் நுழைந்தார்.
 இவர் 10 தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர்.
 தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தவர்: "நாகமண்டலா', "யயாதி', "துக்ளக்' போன்ற நாடகங்கள் கிரீஷ் கார்னாடின் படைப்புகளில் முக்கியமானவை.
 1986-இல் நடிகர் ரஜினிகாந்த் நடித்த "நான் அடிமை இல்லை' படத்தில் தமிழில் அறிமுகமான கிரீஷ் கார்னாட், குணா, காதலன், ராட்சசன், மின்சாரக் கனவு, ஹேராம், செல்லமே, நர்த்தகி, முகமூடி ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்.
 சென்னை ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸில் 1963-இல் வேலைக்குச் சேர்ந்த கிரீஷ் கார்னாட், 1970 வரை அங்கு பணியாற்றினார். பின்னர், தனது பணியைத் துறந்துவிட்டு, சென்னையில் இருந்த "மெட்ராஸ் பிளேயர்ஸ்' என்ற நாடகக் குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார்.
 தலைவர்கள் இரங்கல்: இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக ஆளுநர் வஜுபாய்வாலா, முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மைய தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com