சுடச்சுட

  
  kadhir1


  சமீபத்தில் கிரேஸி மோகனை எல்லாரும் பாராட்டினார்கள்.  பாராட்டு பெற்ற இடம் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கம். இதே அரங்கில் பலமுறை இவரது நாடகம் நடந்திருக்கிறது. பலரும் இவரைப் பாராட்டி உள்ளார்கள். ஆனால் இந்தமுறை அவருக்குக் கிடைத்த பாராட்டுக்கான காரணம் வேறு வகையானது.  அவர் கவிதை எழுதியதற்காகத்தான் இந்த பாராட்டு.  

  இல்லாத துன்பம் இருப்பதாய்த் தோன்ற வைக்கும்
  பொல்லாத மாயையைப் போக்கிவிட்டு -எல்லாமும்
  சாட்சியாய்ப் பார்க்கின்ற சாஸ்வத மெய்யுணர்வே
  மோட்சமாம் நீயதில் மூழ்கு    

  இந்த  வெண்பாவும் கிரேஸி மோகன் எழுதியதுதான். இப்படி சுமார் 425 வெண்பாக்களை பகவான் ரமணரின் மீது எழுதி, அதற்கு ராமாயணத்தை போல் 'ரமணாயனம்' என்றும் பெயரிட்டிருக்கிறார். அந்த வெண்பாக்களுக்கு ராஜ்குமார் பாரதி இசை அமைக்க, கர்நாடக பாடகி காயத்ரி கிரீஷ் மேடையில் ஒரு கச்சேரியை போல் பாட, நாடகத்திற்கு வருவது போன்று இரண்டு மடங்கு மக்கள் கூட்டம் இதற்கும் வந்திருந்து ரசித்தார்கள்.  'எப்படி இருந்தது?' என்று கிரேஸி மோகனிடம் கேட்க, கண்கள் கலங்கிய  நிலையில், 'எல்லாம் ரமணரின் அருள்' என்று சொல்லியதோடு நில்லாமல் தொடர்ந்தார்: 

  'நான் ஒரு நாள் மதுர பாரதி எழுதிய 'ரமண சரிதம்' படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ரமணரின் வாழ்க்கை வரலாற்றைக் கவிதை வடிவில் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு ஒரு நாள் காலையில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன். 24 மணிநேரத்தில் 425 வெண்பாக்களை  எழுதி விட்டேன். ரமணர் முக்தி அடைந்த பகுதி வரும்போது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. என்றும் அழாத நான் ஏன் அழுகிறேன் என்று என் மனைவிக்கு தெரியவில்லை. 'என்ன ஆயிற்று?' என்று என்னிடம் கேட்டார். 'ரமணர் முக்தி அடைந்து விட்டார்' என்று கூறினேன். 'எனக்கு  முக்தி பற்றி ஒன்றும் தெரியாது' என்று கூறியவாறு வேறு வேலை பார்க்கச் சென்று விட்டார். ராமாயணம் போல் காண்டமாக இதைப் பிரித்து 11 காண்டங்கள் எழுதியிருந்தேன். கவிதை எழுத எனது நண்பன் சு.ரவி 'ஆனா' போட்டு விட்டு 'பூனா' போய் விட்டான். என்னுடைய எழுத்துகளுக்கெல்லாம் ஆதார ஸ்ருதி என்னுடைய இளவல் 'மாது' பாலாஜி தான்.  

  இதை இசையோடு பாடலாமே என்று ஒருவர் சொல்ல அதற்கும் பாலாஜிதான் ஆரம்பித்து ராஜ்குமார் பாரதி இசையில், கர்நாடக இசை பாடகி காயத்ரி கிரீஷ் பாட ஒரு கச்சேரியே நடத்தி விட்டார்கள். இது இசை பாடல் வரிசையில் இல்லை என்று எனக்கும் தெரியும். ஆனாலும் பல்வேறு ராகங்களில் சுமார் 70 வெண்பாக்களை சிறப்பாக இசை அமைத்து, அதை வார்த்தை சுத்தமாகப் பாடினார் காயத்ரி கிரீஷ். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் இவர்கள் இருவருக்கும் தான் இந்த பெருமை எல்லாம் செல்ல வேண்டும். மேடையில் பேசிய திருப்பூர்  கிருஷ்ணன் இதை எங்கள் அமுதசுரபியில் வெளியிட்டு எங்களால் குறைந்த தொகை தான் கொடுக்க முடியும் என்று சொல்ல, விரும்பி இதை ரமணரின் பிரசாதமாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றார்.  அதையும் 'பிரஸ்' சாதம் என்று ஏற்றுக் கொள்கிறேன்'' என்று வார்த்தையில் விளையாடினர் கிரேஸி மோகன். 

  - சலன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai