உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 7 அட்டகாசமான படங்கள்! 

1960-ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய கமல்ஹாசன், 2018-ல் வெளியான விஸ்வரூபம் 2 வரை, கடந்த 60 ஆண்டு காலம் தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார்.
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 7 அட்டகாசமான படங்கள்! 

1960-ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய கமல்ஹாசன், 2018-ல் வெளியான விஸ்வரூபம் 2 வரை, கடந்த 60 ஆண்டு காலம் தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார். 19 முறை ஃபிலிம் ஃபேர் விருது, மூன்று முறை தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்மவிபூஷன், செவாலியே உள்ளிட்ட பல உயரிய விருதுகளுக்குச் சொந்தக்காரர் இந்த பரமகுடிக்காரார். இந்தியத் திரையுலகில் நடிகர், துணை நடிகர், இயக்குநர், காமெடியன், வில்லன், கதை மற்றும் திரைக்கதை ஆசிரியர், சிறந்த இயக்குநர் சிறந்த தயாரிப்பாளர், சிறந்த பாடகர் என பல அவதாரம் எடுத்தவர் இந்த  ‘விஸ்வரூப’க்காரர்.

அவரது பிறந்த நாளான இன்று (நவம்பர் 7) என்றென்றும் மறக்க முடியாத 7 கமல்ஹாசன் படங்களைப் பார்க்கலாம்.

மூன்றாம் பிறை

இந்தப் படத்தை இயக்குனர் பாலு மகேந்திரா கமலுக்காகவே எடுத்தாரோ என்று நினைக்கும்வகையில் மிகக் கச்சிதமாகவே ஸ்கூல் டீச்சர் கதாபாத்திரத்துக்கு பொருந்திப் போயிருப்பார் கமல். ஹீரோயிஸம் எதுவும் இல்லாமல், முழுக்க முழுக்க கதையை நம்பி எடுக்கப்பட்ட படம் அது. ஆண் பெண் உறவை இதைவிட சிறப்பாக வேறெந்த படத்திலும் அந்தக் காலகட்டத்தில் காண்பித்திருக்க மாட்டார்கள். மனநலம் பிறழ்ந்த இளம் பெண்னை சீனு அசந்தர்ப்பமான இடத்தில் காண நேரிட, அவளை அங்கிருந்து தப்புவித்து தன்னுடைய ஊருக்கு அழைத்துச் சென்று அவனே பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறான். அவளுடைய உருவம்தான் இளம் பெண் ஆனால் உள்ளம் சிறுமி. அவளுடைய பெயர் கூட தெரியாத நிலையில் விஜி என்று அவளை அழைக்கிறான். கள்ளம் கபடமில்லாமல் தொடங்கிய அவனது மாசற்ற அன்பு ஒரு கட்டத்தில் காதலாகக் கனிகிறது. அவள் நலம் பெற்ற பின் அவளையே மணக்க முடிவெடுக்கிறான். விஜிக்காக சீனு பாடும் கண்ணே கலைமானே என்ற தாலாட்டுப் பாடல் இன்றளவும் பெரிதும் ரசிக்கப்பட்டு வருவதற்குக் காரணம் அதன் இசை, அந்த அழகான வரிகள் மட்டுமில்லை, கமலின் பாந்தமான நடிப்பு. அன்பு, கருணை, கோபம், காதலின் வலி, பிரிவு, இறுதியில் காலம் பிரித்துவிட்ட காதலால் ஏற்படும் பித்து நிலை என கமல் இந்தப் படத்தில் அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி பார்வையாளனை அழ வைத்துவிடுவார். திரையில் நிகழ்வது நிஜமல்ல, அது அந்தக் கதாபாத்திரங்களுக்கு நிகழும் துயர் என்று அறிவு நம்பினாலும், அந்த மகாநடிகனின் அற்புதமான நடிப்பாற்றலால் நம்மையும் மீறி கண்களில் நீர் வழிய செயலற்று போய்விடுவோம். மூன்றாம் பிறையை திரைவானில் என்றென்றும் நிலைக்கச் செய்த பெருமை முழுக்க முழுக்க கமலுக்கே உரியது.

குணா

ஒரு படத்தில் சில காட்சிகள் நன்றாக இருந்தாலே படம் நமக்குப் பிடித்துவிடும். ஆனால் எல்லா காட்சிகளுமே பிரமாதமாக இருக்கும் படங்கள் எல்லாம் கமல் நடித்தவை எனலாம். குறிப்பாக கமலின் குணா. குணாவாகவே உருமாறிய கமலைப் பார்க்கையில் சன்னதம் வந்த ஒரு சாமியாடியைப் போலவே இருப்பார். படம் நெடுகிலும் அபிராமி அபிராமி என்று கூறுவதிலிருந்து, தன் பிறப்பை வெறுக்கும் ஒருவனாக இதிலிருந்து விடுபட்டு எங்கோ தூரமாக ஒரு நல்ல இடத்துக்கு தான் நேசிக்கும் ஒருத்தியுடன் வாழப் பிரியப்படும் ஒருவனாக குணாவை நம் கண்முன் உலவவிட்டிருப்பார் கமல். இங்க ஒரே அசிங்கம், என் அப்பன் கொடுத்த மூஞ்சி....குயிலே குயிலே அந்தக் குருவியை சுட்டுட்டாங்க குயிலே என்று கமல் பேசும் வசனங்கள் எல்லாம் உள்ளத்தை கலங்கடித்துவிடும். அந்தக் குரலும், தன் உயிருக்கே ஆபத்து என்பதை அறியாமல் சின்னஞ்சிறு குருவிக்காக உருகும் அந்த எளிய மனிதனின் கதறல் திரையைத் தாண்டி நம் செவிகளில் ஒலிக்கும். எதிலிருந்து விடுபட நினைத்தானோ அங்கேயே அவனை விதி இழுத்துச் செல்கிறது. தான் நேசித்த அபிராமியின் உயிர் பறிக்கப்பட்ட போது, அவள் உடலைச் சுமந்து மலையிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறான் குணா. அவனுடைய அன்பான மனதுக்கு இந்த உலகத்தின் சூழ்ச்சி கடைசி வரை புரியாது. 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த குணாவை இயக்கியவர் சந்தான பாரதி.  கமலின் மறக்க முடியாத திரைப்படங்கள் பட்டியலில் சந்தான பாரதி இயக்கிய படங்கள் அதிகமுண்டு.

அன்பே சிவம்

கமல் நடித்த படங்களில் மிகவும் தனித்துவமானது அன்பே சிவம். நல்லசிவம் எனும் கதாபாத்திரத்தில் கமல் கம்யூனிஸ்டாகவும், மனித நேயத்துடன் மற்றவர்கள் நலனுக்காக வாழும் ஒரு நல்லாசானாகவும் திரையை நிறைத்திருப்பார். நல்ல கருத்துக்களை மிகத் தேர்ந்த நடிகன் சொல்லும்போது அது நடிப்பெனக் கருதவே முடியாது. திரையை மீறி அக்கதாபாத்திரங்கள் நம் உள்ளத்துக்கு மடைமாற்றம் ஆவதற்கான காரணம் அந்த நடிகன் அக்கதாபாத்திரத்தை முழுவதும் உள்வாங்கி அதுவாகவே மாறியிருப்பதால்தான். கமல் எனும் கலைஞன் இப்படியான ஒரு மந்திரக்காரன் என்றால் மிகையில்லை. எங்கே நடிக்க வேண்டும், எங்கே மெளனமாக இருக்க வேண்டும், எந்த இடத்தில் புருவத்தை மிக மெல்லியதாக உயர்த்த வேண்டும், எங்கே மீசை துடிக்க வேண்டும் என்பதை அணு அணுவாக நுணுக்கமாக அறிந்த நடிகன் கமல். தான் காதலித்த பெண்ணை பிரிந்த போதும், விபத்தில் தன் அழகை இழந்த போதும், பொதுநலனுக்காக வெவ்வேறு இடங்களுக்கு பயணித்து இடம் மாற்றம் கொள்ளும் போதும், தன் கருத்திலிருந்து மாறுபட்ட ஒரு இளைஞனுடன் வெள்ளத்தில் பயணித்து மீட்கும் போதும், சிவம் எனும் அந்த மாமனிதன் அன்பின் பேரூருவமாகவே தோன்றுகிறார்.

இளைஞனாக முறுக்கு மீசையுடன் நாடக கலைஞனான நல்லாவையும் ரசிப்போம். முகம் சிதைந்து உருக்குலைந்து அன்பின் வழியது பயணப்படும் சிவத்தையும் நாம் மிகவும் நேசிப்போம். வாழ்க்கையில் பெரிய எதிர்பார்ப்புகளோ ஆசையோ இல்லாத சிவம், தனக்காக மட்டும் வாழ்வது வாழ்க்கை இல்லை என்பதை தன் இயல்பான வசனங்கள் மூலம் தெரிவிக்கிறார். வாழ்க்கை குறித்த அவரது புரிதலும், பக்குவமான அவர் மனநிலையும், அன்பு என்ற அன்பரசுவை அவர் கையாளும் விதமும் படத்தை வேறொரு தளத்துக்கு உயர்த்திச் சென்றன. பறவைகளுக்கும், துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை.. நிரந்தரம் என்கிற நிலையையே அசௌகர்யமாக கருதும் பறவை நான்’ என  தன்னைப் பற்றி இறுதியில் கடிதத்தில் சொல்கிறார் சிவம். அன்பே சிவம் என்ற பதத்தை பாமரனுக்கும் புரிய வைத்த படம் இது. அன்பே சிவம் போன்ற படங்கள் எல்லாம் திரையில் நடந்த அதிசயம். கமல் அன்றி வேறொருவரால் இந்த ஆழமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கமுடியாது. படம் வெளியான காலகட்டத்தில் அதிகம் கவனம் பெறாவிட்டாலும், திரை ஆர்வலர்களின் எப்போதைக்குமான விருப்பப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் படம் அன்பே சிவம்.

மகாநதி

அழகான ஒரு கிராமத்தில் சந்தோஷமாக தன் குடும்பத்துடன் வாழும் சராசரி மனிதனின் வாழ்க்கையில் விதியும், மனிதர்களின் சூழ்ச்சியும் இணைந்துவிட்டால் அவன் காற்றில் அறுபட்ட பட்டம் போல அலைக்கழிவான் என்பதை கண் முன் நிறுத்திக் காண்பித்த படம் மகாநதி. இந்த சமூகமும அதன் கட்டமைப்பைப் பற்றியும் உரக்க கேள்வி கேட்ட படம் மகாநதி. சக மனிதனை ஏமாற்றும் மனிதர்கள் இருக்கும் வரையில் இந்த நாடு முன்னேறாது என்பதையும் வலியுறுத்தும் படம். கமலின் நடிப்பில் பல காட்சிகள் மிக உருக்கமாக இருக்கும். கொல்கத்தாவில் கமல் தன் மகளை மீட்கும் காட்சியில் அழாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மனம் பதைபதைத்துப் போக வைத்துவிடும் காட்சி அது. பிள்ளைகளை இழந்து வாடும் தகப்பனின் மனத்துயரை இதைவிடவும் சிறப்பாக வெளிப்படுத்த முடியாது. இந்தப் படத்தில் சில வசனங்களுக்காகவும்சமூகத்தை சாக்கடை என்று குறிப்பிட்டதற்கும் சர்ச்சையில் சிக்கினார் கமல். சர்ச்சைக்கும் அவருக்கும் ஏகப் பொருத்தம் என்பதால் அதனை அவர் துளியும் மதிப்பதில்லை. சர்ச்சைகளும் கமல்ஹாசனும் என்று புத்தகமே எழுதும் அளவுக்கு அவர் மீது காழ்ப்புணர்வு மிக்கவர்கள் அவதூறு செய்துள்ளனர். ஆனால் தூற்றுவோர் தூற்ற போற்றுவார் போற்ற தன் வழியான தனி வழியில் நடந்து ஜெயித்துக் கொண்டே இருப்பவர் அந்த 'விருமாண்டி' 'நாயகன்'. தன் படங்கள் மூலம் தன் சமூக அக்கறையை பல முறை நிலைநாட்டிய உன்னத கலைஞர் கமல். அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கமலின் நடிப்பை ரசிப்பார்கள் என்பது மிகையற்ற உண்மை.

ஹேராம்

மகாத்மா காந்தியைக் கொல்ல நாதுராம் கோட்சே மட்டுமல்ல சாஹேத் ராமும் முயன்றார் என்று பேரலலான ஒரு கதையை ஹேராம் மூலம் உருவாக்கினார் கமல். இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார் கமல். ஹேராம் படத்துக்காக தேசிய விருது பெற்றார் கமல். மேலும் இத்திரைப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் படத்தின் சிறப்புகளை சொல்ல ஒரு கட்டுரை போதாது. ஒரு புத்தகம் எழுதினால் கூட முழுவதையும் சொல்லிவிட முடியாது. சாகேத் ராம் பணிபுரியும் வேலை போன்று தோண்ட தோண்ட கிடைக்கும் இப்படத்தின் மறைபொருள். நட்பு, காதல், காமம், துரோகம், பழி வாங்கும் உணர்ச்சி என்று பலவிதமான உணர்வுப் போராட்டங்களில் சிக்கித் தவிக்கும் சாகேத் ராம், மன அமைதி இல்லாமல் அலைந்து திரிந்து காந்தியை கொன்றால்தான் தன் மனத்துக்கு ஆறுதல் கிடைக்கும் என்று முடிவெடுத்து அதற்கான வழிகளில் தடம் மாறுகிறான். ஆனால் மகாத்மா காந்தியின் மரணத்துக்குப் பின் அவனுக்குள் ஒரு திறப்பு. மனமாற்றத்துக்குப் பின் காந்தியின் பாதுகையை எடுத்து வந்து, தனது இறுதிமூச்சு வரை பத்திரப்படுத்துகிறான். 

பம்மல் கே சம்மந்தம்

கமல் எந்த அளவுக்கு தீவிரமாக நடிக்கக் கூடியவரோ, அந்தளவுக்கு நகைச்சுவையிலும் கலக்குபவர். அவ்வை சண்முகியை யாரேனும் மறக்க முடியுமா? சதி லீலாவதி படத்தில் பழநி பழநி என்று கோவை சரளாவை அழைத்தும், மாறுகோ மாறுகோ மாறுகையி என்று பாடும் அந்தக் குரல்மொழியை நினைவிலிருந்து அகற்ற முடியுமா? காதலா காதலா படத்தில் பிரபு தேவாவுடன் அடிக்கும் லூட்டியும், வசூல்ராஜாவில் பிரகாஷ் ராஜை சிரித்தபடி பதற வைக்கும் காட்சிகள் எல்லாம் வேறு வகை. எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அது கமலிடம் வந்துவிட்டால் அதன்பின் அதை அவர் பார்த்துக் கொள்வார். காமெடி படங்களில் நடிப்பது தனது பிரத்யேக விருப்பம் என்று அவர் சில பேட்டிகளில் கூறியுள்ளார். மைக்கேல் மதன காமராஜன், தெனாலி, பஞ்சதந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவையில் தனி முத்திரை பதித்திருப்பார் ஆஸ்கர் நாயகன். அதிலும் குறிப்பாக பம்மல் கே.சம்மந்தம் படத்தில் கல்யாணத்தை வெறுக்கும் ஒரு இளைஞன் பின் காதலில் விழுந்து, அது தவறான புரிதல் என்பதைத் தெரிந்தபின், காதலித்த பெண்ணை மறக்க முடியாமல் தவிக்கும் கதாபாத்திரத்தை தனக்கே உரிய பாணியில் அட்டகாசமாக நடித்து அசத்தியிருப்பார். 

பாபநாசம்

கமல் நடிப்பில் சில ஆண்டுகள் முன் வெளிவந்த பாபநாசம் த்ருஷ்யம் என்ற மலையாளப் படத்தின் மொழியாக்கம் ஆகும். இதில் கஞ்சத்தனமும், கறார்த்தனமுமாக ஒரு நடுத்தர அப்பாவி கிராமத்தானாக கமல் முதல் பாதியில் தொடங்கி, இடைவேளைக்குப் பின் குடும்பத்துக்காக போராடும் ஒருவனாக, தான் பார்த்தப் படங்களிலிருந்து சூழலுக்குத் தேவையான விஷயங்களை கிரகித்து, தன் மூளையையும் அனுபவத்தையும் பயன்படுத்தி இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் புத்திசாலியாக, உணர்வுரீதியாக ஒரு தகப்பன்சாமியாக திரையில் ஜெயித்துவிடுகிறார்.

உலகம் முழுவதும் நடந்து கொண்டேயிருக்கும் ஒரு விஷயம் நல்லவைக்கு அல்லாதவைக்கும் இடையே நிகழும் துவந்தம். மகாபாரதம், ராமாயணக் கதைகளிலிருந்து தற்காலம் வரை நடக்கும் சமர்களுக்கான காரணம் நல்லவன் கெட்டவன், கடவுள் சாத்தான் கருத்தியல் இதற்கிடையே நிகழும் போராட்டங்கள் தான். மனித மனத்துக்குள கடவுளும் இருக்கிறான, சாத்தானும் உள்ளான். திட்டமிட்டுச் செய்யப்படவில்லை எனிலும் அது உயிர் பறித்தல், கொலையையே செய்துவிட்டு மறைக்கும் ஒரு குடும்பத்தின் மீது நிச்சயம் யாருக்கும் கோபம் வரும். ஆனால் அதன் காரணம், பின்னனி தெரிகின்ற போது அவர்கள் பிடிபட்டுவிடக்கூடாது என்று தான் நினைக்கிறோம். பாபநாசம் க்ளைமேக்ஸ் காட்சிகள் தமிழுக்காக சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது உண்மையில் தமிழ் ரசிகர்களுக்கான பிரத்யேக கவனம் எனக் கொள்ளலாம். நெகிழ்ச்சியாக கமல் பேசும் வசனங்கள் மகாநதியை நினைவுப்படுத்தினாலும் ஒரு கலைஞனாக அவரது பயணம் முழுக்க பார்க்கும் ஒரு ரசிகனை ஒருபோதும் அவர் ஏமாற்றுவதில்லை.

கண்கள் மட்டுமல்ல, உடல் மட்டுமல்ல கமலின் ஒவ்வொரு அங்கமும் குற்றவுணர்விலும் துயரத்திலும் மிகையற்ற நடிப்பை காண்பிக்கிறது. தமிழ் சினிமாவின் பெருமை சகாப்தம் ஆகச் சிறந்த கலைஞன் கமல் என்றால் இதில் ஒரு சொல் கூட பொய்யில்லை. அவரது அற்புதமான நடிப்பிற்கு மற்றொரு உதாரணம் போலீஸ் அவர்கள் வீட்டில் குழி தோண்டிக் கொண்டிருக்க அனைவரும் பதற்றத்தின் உச்சியில் இருக்க கமல் மட்டும் சின்னதாக ஒரு கெத்துடன் இருப்பார். உண்மை தெரிந்ததும் அவர் முகத்தில் தென்படும் மிக மிகச் சிறிய புன்னகை. இதுவொன்றே போதும் நம் நாயகன் பல இடங்களில் சிகரம் தொட்டுள்ளார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இன்னும் எத்தனை எத்தனையோ படங்கள், மனதை விட்டு நீங்காத காட்சிகள் சொல்லித் தீராதவை, சொல்லிலும் அடங்காதவை. கமல் என்னும் மகா கலைஞன் வாழும் காலகட்டத்தில் நாமும் அவரை நேரடியாகப் பார்த்து ரசிக்கிறோம் என்பது நமக்குக் கிடைத்த பேறு. வாழ்க நீ எம்மான்!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பத்மஸ்ரீ கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com