போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை: கமல் பேச்சு

நான் அரசியலுக்குச் செல்வதை என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் விரும்பவில்லை.
போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை: கமல் பேச்சு

இன்று தனது 65-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் கமல். கமலின் 60 ஆண்டு காலத் திரைப்பயணத்தைக் கொண்டாடும் விதமாக மூன்று நாள்களுக்கு பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று அவரது தந்தை டி.சீனிவாசனின் நினைவு தினமும் கூட. இதையொட்டி, அவரது சொந்த ஊரான பரமக்குடியில் சீனிவாசனின் சிலையைத் திறந்து வைத்தார். இதில் கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிா்வாகிகளும் கலந்துகொண்டுள்ளார்கள். இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கமலின் குடும்ப உறுப்பினர்கள் பரமக்குடிக்கு வருகை தந்துள்ளார்கள். சிலை திறப்பு விழாவில் சாரு ஹாசன், சுஹாசினி, ஷ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன், பிரபு போன்றோர் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மக்கள் நீதி மய்யத்தின் வேலை வாய்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிலகத்தையும் கமல் ஹாசன் தொடங்கி வைத்தார். 

இந்த விழாவில் கமல் பேசியதாவது:

என் தந்தை என்னை ஐஏஎஸ் படிக்கச் சொன்னார். அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்த பிறகு சங்கீதமாவது கற்றுக்கொள் என்றார். எங்கள் குடும்பத்தில் எல்லோரும் திறமையானவர்கள். இதற்கு  ஈடுகொடுக்க முடியாமல் தான் கலைத்துறையில் நான் நுழைந்தேன். எங்களுக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வு, தார்மீகக் கோபம் எல்லாம் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டதுதான். எனக்கு அவருடைய ரெளத்திரமும் பிடிக்கும். நகைச்சுவையும் பிடிக்கும். அது எல்லாம் என்னிலும் வந்து தேங்கியிருப்பது எனக்கு மகிழ்ச்சி. எனக்கு எது வருகிறதோ அதைச் செய் என்று உத்வேகப்படுத்தும் தகப்பனாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கு அவர் முன்னுதாரணம். கமல் ஹாசன் என்ன படித்துள்ளார் என்று ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் திறமைகள் உண்டு. அதை வைத்துக்கொண்டு இந்த மேடையில் பேசிக்கொண்டிருக்கிறேன். பிறகு எனக்குப் பாடம் கற்றுக்கொடுத்த ஆசான்கள் எல்லாம் தகப்பன்களாகவே மாறிவிட்டார்கள் என்பதுதான் உண்மை. நான் பார்க்க, நான் புளங்காங்கிதம் அடைய கே. பாலசந்தருக்கு சென்னையில் சிலை அமைத்துள்ளேன். இவர்கள் பூஜைக்குரிய உருவங்கள் அல்லர். பின்பற்றவேண்டிய குருக்கள். 

நான் அரசியலுக்குச் செல்வதை என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் விரும்பவில்லை. ஒரே ஒரு மனிதர் மட்டும்தான் நான் அங்கே செல்லவேண்டும் என்பதைப் பல காலமாகச் சொல்லிக்கொண்டிருப்பார். இன்று அதுவும் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் எல்லாம் சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபடத் தேவை இருந்தது. நான் எதற்கு அரசியலுக்குச் செல்லவேண்டும் என்று கேட்டபோது அப்படி ஒரு போராட்டம் மறுபடியும் வந்தால் என்று சொன்னார். அதனால் தான் நான் அரசியலுக்கு வந்தேன். போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை. 

நான் சலூனில் வேலை பார்த்துள்ளேன். படிக்கத்தான் இல்லை, ஏதாவது ஒரு வேலை பார்க்கலாம் என ஒன்றரை மாதம் அந்த வேலையைப் பார்த்தேன். அந்த அனுபவம் எனக்கு வேறு தொழில்களைக் கற்றுக்கொள்ள உதவியது. அந்த வேலையைச் செய்திருக்கா விட்டால் எடிட்டிங், கேமரா பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டிருக்க மாட்டேன். எந்தத் தொழிலுமே கீழானது இல்லை. சத்தியாகிரகப் போராட்டத்துக்குப் பிறகு இந்தியாவில் முழு மூச்சுடன் போராட வேண்டிய போராட்டம் - திறமை வளர்ப்புப் போராட்டம் தான். அதில் தமிழகம் இன்னும் பங்குபெறாமல் உள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இது செயல் வடிவத்துக்கு வந்துள்ளது. நான் இந்த வேலையை மட்டும்தான் செய்வேன் என்கிற மனநிலை மாறவேண்டும். இங்கு எல்லாமே தானமாக, இலவசமாகக் கொடுத்துக் கொடுத்து நம்மைக் கெடுத்துவிட்டார்கள். இலவசத்தை வாங்காதே என்றால் கிடைப்பதை நீ ஏன் தடுக்கிறாய் என்று என்னைத் திட்டுவார்கள். 5 வயதுக்குப் பிறகு குழந்தையின் குதூகலத்துடன் நான் அனுபவிக்கும் பிறந்த நாள் இது என கமல் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com