கமலை ஜனாதிபதியாகப் பார்க்க ஆசைப்படுகிறோம்: நடிகர் பிரபு பேச்சு

நடிகர் கமல் ஹாசனை இந்திய ஜனாதிபதியாகப் பார்க்க ஆசைப்படுகிறோம் என நடிகர் பிரபு பேசியுள்ளார்.
கமலை ஜனாதிபதியாகப் பார்க்க ஆசைப்படுகிறோம்: நடிகர் பிரபு பேச்சு
Published on
Updated on
1 min read

நடிகர் கமல் ஹாசனை இந்திய ஜனாதிபதியாகப் பார்க்க ஆசைப்படுகிறோம் என நடிகர் பிரபு பேசியுள்ளார்.

கமலின் 60 ஆண்டு காலத் திரைப்பயணத்தைக் கொண்டாடும் விதமாக அவரது பிறந்த நாளான இன்று முதல் முதல் மூன்று நாள்களுக்கு பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1959-ஆம் ஆண்டு 5 வயது சிறுவனாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவா் கமல்ஹாசன். ‘களத்தூா் கண்ணம்மா’ படத்தின் மூலம் அறிமுகமான கமலுக்கு, திரையுலகில் இது 60-ஆவது ஆண்டு. நடிகா், இயக்குநா், தயாரிப்பாளா், வசனகா்த்தா, பாடலாசிரியா், நடன இயக்குநா் என பன்முகங்களை கொண்ட கமல், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமா வரலாற்றிலும் தனித்துவம் பெற்று விளங்கி வருகிறாா். தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளாா்.

இந்த நிலையில், இன்று தனது 65-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் கமல். வழக்கமாக தனது பிறந்த நாளில் நற்பணிகளைத் தொடங்கி வைத்து பேசும் கமல், இந்த முறை பெரும் விழாவுக்குத் திட்டமிட்டுள்ளாா். இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன. இதில் ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்ட தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரையுலகினா் பலரும் கலந்து கொள்கின்றனா். இதன் ஒரு பகுதியாகத் திரையுலகினா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று அவரது தந்தை டி.சீனிவாசனின் நினைவு தினமும் கூட. இதையொட்டி, அவரது சொந்த ஊரான பரமக்குடியில் சீனிவாசனின் சிலையைத் திறந்து வைத்தார். இதில் கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிா்வாகிகளும் கலந்துகொண்டுள்ளார்கள்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கமலின் குடும்ப உறுப்பினர்கள் பரமக்குடிக்கு வருகை தந்துள்ளார்கள். சிலை திறப்பு விழாவில் சாரு ஹாசன், சுஹாசினி, ஷ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன், பிரபு போன்றோர் கலந்துகொண்டார்கள்.

இந்த விழாவில் நடிகர் பிரபு பேசியதாவது:

5 வயதுக்கு சினிமாவுக்கு வந்தாராம். சினிமாவுக்கு வந்து 60 வருடங்கள் ஆகிவிட்டதாம். பார்ப்பதற்கு அப்படியா உள்ளார்? மாஸ்டர் கமல் ஹாசன்.

அண்ணன் கமல் மீது அப்பாவுக்கு அளவு கடந்த பிரியம் உண்டு. என் திரையுலக வாரிசு கமல் தான் என அப்பா அடிக்கடிச் சொல்வார். தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுக்கொண்டு என் தோளில் மீது ஏறிக்கொண்டு திரையுலகை அண்ணார்ந்து பார்க்கிறார் எனக் குறிப்பிடுவார். 

அண்ணனைக் குடும்பத்துடன் இப்படிப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமாக உள்ளது. அன்புக்கு அடிமை எங்கள் அண்ணன் கமல். அவரை அன்பால் அடித்துத் துவைத்துவிடலாம். திருமதி சாருஹாசன் இங்குப் பேசும்போது அவரை ஜனாதிபதியாகப் பார்க்கவேண்டும் என்றார். தம்பிகள் எல்லோருக்கும் அதுதான் ஆசை. அண்ணனை ஜனாதிபதியாகப் பார்க்க ஆசைப்படுகிறோம். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை நாங்கள் வேண்டிக் கொள்கிறோம் என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com