பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்றது ஏன்?: மன்னிப்புடன் கடிதம் எழுதியுள்ள கவின்!

பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து எதிர்பாராதவிதத்தில் வெளியேறியதற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் கவின்...
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்றது ஏன்?: மன்னிப்புடன் கடிதம் எழுதியுள்ள கவின்!

பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து எதிர்பாராதவிதத்தில் வெளியேறியதற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் கவின்.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3, சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் திடீரென வெளியேறினார் நடிகர் கவின். இந்தப் போட்டியில் ஒருவர் மட்டும்தான் வெற்றி பெற்று ரூ. 50 லட்சத்தைப் பெறமுடியும். இதனிடையே ரூ. 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு இந்த வீட்டை விட்டு இன்றே வெளியே செல்லும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது என்று போட்டியாளர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தான் வெளியேறுவதாக அறிவித்தார் கவின். இதைக் கண்டு அவருடைய நெருங்கிய நண்பர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். ரூ.5 லட்சம் பணத்துக்காக அவர் வெளியேறவில்லை, இந்த முடிவை எடுக்கவில்லை என்பது அவருடைய பிரியாவிடைப் பேச்சில் இருந்து புரிந்துகொள்ள முடிந்தது. 

இதையடுத்து இன்ஸ்டகிராம் தளத்தில் தனது ரசிகர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் கவின். அதில் அவர் கூறியுள்ளதாவது:

முதலில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது ஏன் என்று நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என எண்ணுகிறேன். நான் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தேன். நான் முயற்சி செய்த அனைத்தும் தோல்வியில் முடிந்தன. பிக் பாஸுக்குள் நுழைவதால் கடந்த சில வருடங்களில் நான் இழந்ததை மீட்டெடுக்கும் வாய்ப்பாகக் கருதினேன். நேர்மறை எண்ணங்களுடன் தான் உள்ளே நுழைந்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகக் கொஞ்சம் பணமும் சிறிய அளவிலான வெளிச்சத்தையும் மட்டுமே எதிர்பார்த்தேன். ஆனால் தற்போது நான் காண்பது, என்னால் புரிந்துகொள்ள முடியாதது. இந்தப் புகழை நான் விரும்பினாலும் என்னால் அனுபவிக்க முடியாத அளவுக்குப் பிரச்னைகளும் உள்ளன. எனவே என் மீது அன்பு செலுத்தியவர்களுக்கு உரிய நன்றியை என்னால் செலுத்த முடியவில்லை. இப்போது எனக்குக் கிடைத்த அன்பைத் திருப்பிச் செலுத்துவதை விடவும் என் குடும்பத்தைக் கவனிப்பதை அவசியமாகக் கருதுகிறேன். 

இது ஒரு ரியாலிட்டி ஷோ என்பதைப் போகப் போகத்தான் புரிந்துகொண்டேன். நிகழ்ச்சியில் பங்கேற்ற 17 பேருக்கும் நீங்கள் வாழ்க்கைப் பாடத்தைக் கற்பித்திருக்கிறீர்கள். உங்களை வருத்தப்படுத்திருந்தால் என்னை மன்னிக்கவும். என்னைப் புரிந்துகொண்டு அனைவரும் மன்னிப்பீர்கள் என நம்புகிறேன். ஒருவேளை உங்களைக் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com