அசுரன் படம் பார்த்தபோது தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத நான்கு பேரை திரையரங்கை விட்டு வெளியேற்றிய நடிகர்!

நாட்டுக்காக 52 விநாடிகள் எழுந்து நிற்கக் கூடாதா? ஆனால், உங்களால் மூன்று மணி நேரம் அமர்ந்து படம் மட்டும் பார்க்க முடியும்? நீங்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளா? 
அசுரன் படம் பார்த்தபோது தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத நான்கு பேரை திரையரங்கை விட்டு வெளியேற்றிய நடிகர்!

நாட்டுக்காக 52 விநாடிகள் எழுந்து நிற்கக் கூடாதா? ஆனால், உங்களால் மூன்று மணி நேரம் அமர்ந்து படம் மட்டும் பார்க்க முடியும்? நீங்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளா? 

கூட்டம் குறைவாக உள்ள திரையரங்கில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டபோது அதற்கு எழுந்து நிற்காத நான்கு பேரிடம் சிலர் கடுமையாகப் பேசுவதை விடியோவில் காணமுடிகிறது. கன்னட நடிகர் அருண் கெளடாவும் அவருடைய நண்பர்களும் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காக இரு ஆண், இரு பெண்களைத் திரையரங்கை விட்டு வெளியேற வைத்துள்ளார்கள். இந்தச் சம்பவத்தின் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 23 அன்று பெங்களூரில் உள்ள திரையரங்கில் அசுரன் படம் பார்க்கச் சென்ற நான்கு பேருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத நான்கு பேரிடமும் தானும் தனது நண்பர்களும் கோபமாகப் பேசுவதை விடியோவாக எடுத்துள்ளார் கன்னட நடிகர் அருண் கெளடா. காஷ்மீரில் நமது ராணுவ வீரர்கள் போரிடுகிறார்கள். ஆனால், இங்கு உங்களால் தேசிய கீதத்துக்குக் கூட எழுந்து நிற்க முடியவில்லை என்று அந்த நான்கு பேரிடமும் ஒருவர் கோபமாகப் பேசும் காட்சியும் விடியோவில் உள்ளது.

தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காதவர்களை இடைவேளையின்போது தான் தட்டிக் கேட்டோம். நான்கு பேரும் திரையரங்கிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதேபோல அந்த நான்கு பேரும் வெளியேற்றப்பட்டார்கள் என்று ஒரு பேட்டியில் அருண் கெளடா கூறியுள்ளார். 

உச்ச நீதிமன்றத்தில் ஷியாம் நாராயண் சௌக்சி என்பவர் தொடுத்த பொது நல மனுவில், திரையரங்குகளில் திரைப்படங்கள் தொடங்கும் முன்பு, தேசிய கீதத்தை கட்டாயம் இசைக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்த மனு மீது உச்ச நீதிமன்றம் 2016 டிசம்பர் மாதம் பிறப்பித்த தீர்ப்பில், திரையரங்குகளில் திரைப்படங்கள் தொடங்கும் முன்பு, தேசிய கீதத்தை கட்டாயம் இசைக்க வேண்டும், அப்போது திரையரங்குகளில் இருப்போர் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்து நின்று, தங்களது தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் 2017 அக்டோபரில் தெரிவித்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com