வெளியே போ...: பிக் பாஸில் கடுமையாக மோதிக்கொண்ட வனிதா விஜயகுமார் & கவின்!

இது பரிதாபம் ஏற்படுத்துவதற்கான மேடை கிடையாது. உன்னால் விளையாடி ஜெயிக்க முடியாது என்பதால் தர்ஷன் ஜெயிக்கவேண்டும் என்கிறாய்...
வெளியே போ...: பிக் பாஸில் கடுமையாக மோதிக்கொண்ட வனிதா விஜயகுமார் & கவின்!

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகர் கவினுக்கும் நடிகை வனிதாவுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த வார நாமினேஷனுக்கான நிகழ்ச்சியில், கவின் இயக்குநர் சேரனையும் நடிகை ஷெரினையும் நாமினேட் செய்தார். அனைவர் முன்பும் இந்த நடைமுறை நிகழ்ந்ததால் அது மோதலுக்குக் காரணமாகவும் அமைந்தது. சேரனும் ஷெரினும் வெற்றியைப் பார்த்துவிட்டார்கள். ஆனால் இளைஞர்கள் (தர்ஷன், முகின் போன்றவர்கள்) பலர் இங்கு வெற்றியைக் கண்டதில்லை. அவர்கள் ஜெயிப்பதற்காக சேரனையும் ஷெரினையும் நாமினேட் செய்வதாகக் கூறினார். கவின் சொன்ன இந்தக் காரணத்தைக் கண்டு கொதித்துப் போய்விட்டார் வனிதா.   

வெளியில் சாதித்ததை நாமினேஷனாகச் சொல்வது எனக்குச் சரியாகத் தெரியவில்லை என்று மோதலை ஆரம்பித்தார் வனிதா. மேலும் பிக் பாஸிடமும் இதுகுறித்து முறையிட்டார். வெளியில் செய்ததை ஒரு காரணமாகச் சொல்வதை விட இங்குள்ள பிரச்னையைச் சொல்லச் சொல்லுங்கள் பிக் பாஸ். கவின் சொல்வது சரியான காரணமாகத் தெரியவில்லை என்றார். 

உடனே ஷெரினை எனக்குப் பிடிக்காது. என்னை நாமினேட் செய்ததால் பிடிக்காது என்று தன் விளக்கத்தை வேறுவிதமாகச் சொன்னார் கவின். இவர்கள் இருவரும் வழிவிட்டால் மற்ற நான்கு பேரும் முன்னேறுவார்கள் என்றார். சேரனும் வனிதாவின் குரலைப் பிரதிபலித்தார். கவின் நீ சொல்வது பரிதாபத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறதே தவிர நியாயமானதாக இல்லை என்றார். 

கவின் தன் காரணத்தைச் சொல்லி அமர்ந்தவுடன் அடுத்து வந்தார் வனிதா. ஜெயிக்கவேண்டும் என்று எண்ணியவர்கள் வெளியே போய்விட்டார்கள். அதற்கு முட்டுக்கட்டைப் போட்டவர்கள், ஜெயிக்க எண்ணம் இல்லாதவர்கள் உள்ளே இருப்பதால் அவர்கள் வெளியே போய்விட்டார்கள் என்று சொல்லி கவினையும் லாஸ்லியாவையும் நாமினேட் செய்தார். இதன்பிறகு வந்த சாண்டியும் தன் நெருங்கிய நண்பரான கவினை நாமினேட் செய்தார். அப்போது அவர் அழுதபடி அதற்கான காரணங்களைச் சொல்ல, கவினும் தலையைக் கவிழ்த்தபடி அழுதார். அந்தத் தருணம் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. ஆனால் வனிதாவால் அந்தச் சூழலை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. 

நாம் அழுவதைப் பார்த்து மக்கள் சிரிக்கத்தான் போகிறார்கள். இங்கு அழுவதற்கு ஒன்றுமே இல்லை என்றார் வனிதா. கவினின் அழுகையை நியாயப்படுத்தி வனிதாவிடம் விவாதம் செய்தார் சாண்டி. இதன்பிறகு பலரும் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றுவிட்டார்கள். அப்போதும் அழுதுகொண்டிருந்த கவினைத் தேற்றினார் ஷெரின். 

பிறகு சேரனிடம் பேசினார் வனிதா. எத்தனையோ பெண்கள் வெளியே சென்றுள்ளார்கள். அவர்கள் எல்லோரும் நாமினேஷனில் இப்படித்தான் அழுதுகொண்டிருந்தார்களா? இதே மாதிரி நானும் தான் ஒருநாள் வெளியே சென்றேன். அப்போது நான் அழுது சீன் எதுவும் போடவில்லையே. என்னை நாமினேட் செய்தவர்களை மீண்டும் இங்கு வந்து நான் பழிவாங்கவில்லையே என்றபோது வனிதாவுக்குப் பதிலளிக்க முயன்றார் கவின். லாஸ்லியாவும் கவினுக்கு ஆதரவாக வனிதாவிடம் விவாதம் செய்தார்.

உணர்வுபூர்வமாவது என்பது நம்மைத் தாண்டிய ஒரு விஷயம். நேற்று கூட நீங்கள் உணர்வுபூர்வமாகப் பேசினீர்கள். அதன்மூலம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்று சொல்லமுடியுமா என்று கேள்வி எழுப்பினார் லாஸ்லியா.

இந்த விவாதம் கவின் - வனிதா இடையே பெரும் மோதலாகக் கிளம்பியது. 

இங்கு யார் ஜெயிக்கவேண்டும் என்பதை மனத்துக்குள் வைத்துக்கொள்ளுங்கள். இங்குப் பிரசாரம் செய்தால் அது தாக்கத்தை ஏற்படுத்தும்தான். சாக்‌ஷி, ரேஷ்மா ஜெயிக்கவேண்டும் என நான் நினைக்கிறேன். மக்கள் உன்னை இத்தனை வாரம் காப்பாற்றினார்கள் இல்லையா, இதே போல சாக்‌ஷியைக் காப்பாற்றியிருந்தால் அவள் இறுதிச்சுற்றுக்குப் போயிருப்பாள். உன்னால் தான் அவள் வெளியே போனாள். நீ இப்போது வெளியே சென்று அவளை உள்ளே கொண்டு வா. அப்போது நீ செய்வது சரி என ஒப்புக்கொள்கிறேன் என்று கவினிடம் கோபமாகப் பேசினார் வனிதா. 

கவின்: நான் தான் நேற்றே சொன்னேனே, கதவைத் திறந்துவிட்டால், நான் வெளியே சென்றுவிடுவேன். 

வனிதா: நீ சாக்‌ஷியை உள்ளே கொண்டுவந்துவிட்டு விட்டு வெளியே போ... இது பரிதாபம் ஏற்படுத்துவதற்கான மேடை கிடையாது. உன்னால் விளையாடி ஜெயிக்க முடியாது என்பதால் தர்ஷன் ஜெயிக்கவேண்டும் என்கிறாய். 

கவின்: என்னை விடவும் தர்ஷன் ஜெயித்தால் சந்தோஷம். அவன் வாழ்வானா சாவோமா எனத் தெரியாமல் இங்கு வந்தவன். 

வனிதா: நான் கஷ்டத்தைப் பார்த்ததில்லை என நீ எப்படிச் சொல்லலாம்? பெண்கள் பார்க்காத கஷ்டத்தை நான் பார்த்துள்ளேன். என்னை நீ மதிப்பிடவேண்டாம். 

கவின்: தர்ஷன், யார் யாரோ செய்த தவறுகளுக்காக அவன் கஷ்டப்பட்டுள்ளான். மனிதர்கள் நாம் செய்கிற தவறுகளுக்காகத் தண்டனை அனுபவிப்பது வேறு. 

வனிதா: இது என்ன போட்டியா, யார் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்று?

இப்படி, நேற்றைய நிகழ்ச்சி, கவின் - வனிதா இடையிலான மோதலாகவே இருந்தது. இன்றைக்கும் இந்த மோதல் தொடர்வது முன்னோட்டத்தின் மூலமாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com