
நடிகைகள் சிலர் திருமணம் செய்யாமல் வாழ்வதைப் பேஷனாக்கி வருகிறார்கள். ஏற்கெனவே நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஓவியா திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்திருக்கின்றனர்.
அந்த வரிசையில் தற்போது வரலட்சுமியும் இடம் பிடித்திருக்கிறார். விமல், வரலட்சுமி ஜோடியாக நடிக்கும் படம் 'கன்னிராசி'. ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்குகிறார்.
இதில் நடித்தது பற்றி வரலட்சுமி கூறும்போது தனது திருமண முடிவு பற்றியும் திடீரென அறிவித்து அதிர்ச்சி தந்தார். அவர் பேசும் போது....

'புதிய இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். 'கன்னிராசி' படத்தின் திரைக்கதை நகைச்சுவைப் பகுதிகள் நிறைந்தது. இந்த படக்குழு மிகுந்த உற்சாகமானது.
காதல் திருமணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து இப்படத்தில் ஜாலியாக நடித்தேன்.
இந்தப் படத்தைப் போல் வேறு எந்தப்படத்திலும் இவ்வளவு நடிகர்களுடன் நான் சேர்ந்து நடித்தது இல்லை. விமலுடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இது குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும்' என்றார் வரலட்சுமி.