பல்கேரியாவில் படமாக்குவது எனக்கு சென்டிமெண்டான விஷயம்!

'பாகுபலி' படத்தின் சில காட்சிகளை பல்கேரியாவில் படமாக்கினார் ராஜமௌலி.
பல்கேரியாவில் படமாக்குவது எனக்கு சென்டிமெண்டான விஷயம்!

'பாகுபலி' படத்தின் சில காட்சிகளை பல்கேரியாவில் படமாக்கினார் ராஜமௌலி. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. உலக அளவில் பெரும் சாதனை படைத்தது. இப்போது தனது அடுத்த படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தின் படப்பிடிப்பையும் பல்கேரியாவில் நடத்தச் சென்றிருக்கிறார். கதைப்படி ஜூனியர் என்டிஆர் சம்பந்தப்பட்ட காட்சிகளை பல்கேரியாவில் படமாக்குகிறார் ராஜமௌலி. இந்தப் படத்தில் ராம் சரண் தேஜா, அலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். அவரையும் ராஜமௌலி தேர்வு செய்துவிட்டார். விரைவில் அவரைப் பற்றி அறிவிப்பார் என்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய கதையாக இப்படம் உருவாகி வருகிறது. பல்கேரியாவில் படமாக்குவது என்பது அவருக்கு சென்டிமெண்டான விஷயம் என்கிறார்கள். 

**

பெரும் ஆளுமைகளின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கத்தில் பல தலைவர்களின் வாழ்க்கை படமாகி வருகின்றன. வணிக லாபம், அரசியல் நோக்கம், கொள்கை பரப்புரை எனப் பல வடிவங்கள் இருந்தாலும், இது ஆவணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையைத் தழுவி படம் எடுக்கப்பட்டு வருகிறது. 'பசும்பொன் தெய்வம்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தில் அவரின் பிறப்பு, படிப்பு, குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டம், நேதாஜியுடனான சந்திப்பு, கைரேகைச் சட்டத்தை எதிர்த்தது, சுதந்திரப் போராட்டம், ஆலய நுழைவுப் போராட்டம், பார்வர்டு பிளாக் கட்சி பணி, 'நேதாஜி' என்ற பெயரில் வெளியான பத்திரிகையில் பணியாற்றிய அனுபவங்கள், அவரின் மரணம் உள்ளிட்ட பல சம்பவங்கள் இதில் தொகுக்கப்படவுள்ளன. சூலூர் கலைப்பித்தன் இப்படத்தை திரைக்கதை எழுதி தயாரித்து இயக்குகிறார். இவர் ஏற்கெனவே "சாட்டையில்லாத பம்பரம்', "சுதந்திர பாரதி', "துளசி மாலை' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியுள்ளார். ராஜா முகம்மது, அண்ணாதுரை உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

**

என்னமோ ஏதோ','கரையோரம்', "நாரதன்', '7 நாட்கள்', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படங்களில் கவர்ச்சி நடிப்பில் ஈர்த்தவர் நிகிஷா படேல். தமிழில் பெரிய வாய்ப்பு இல்லாத நிலையில் கடந்த ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் 'பாண்டிமுனி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் இயக்குநருடன், நிகிஷா பங்கேற்றார். ஆனால் திடீரென்று அப்படத்திலிருந்து நிகிஷா நீக்கப்பட்டார். இயக்குநர் கஸ்தூரிராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்திலிருந்து நிகிஷா நிராகரிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. புதிய படம் எதுவும் இல்லாமல் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிகிஷா, இணையத்தில் அதற்காக வலை வீசி வருகிறார். மும்பை வீட்டில் பொழுதை கழித்துக் கொண்டிருந்த நிகிஷா திடீரென்று துருக்கிக்குப் பறந்தார். கடற்கரைப் பகுதியிலும், நீச்சல் குளத்திலும் சிவப்பு நிற நீச்சல் உடையில் நீந்தி மகிழ்ந்ததுடன் அப்படங்களை இன்ஸ்டாவிலும் பகிர்ந்து 'என்னைப் பார் என் அழகைப்பார்' என்று கமெண்ட் பகிர்ந்திருக்கிறார். அதற்கு ஏகத்துக்கு ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 'சினிமாவில் உங்களை மீண்டும் எப்போது பார்ப்பது?' என்று பலர் கேட்டிருக்கின்றனர்.

- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com