மே 11 முதல் தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பு?: ராதிகா, குஷ்பு விளக்கம்!

மே 11 முதல் தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பாகவுள்ளன என்று வெளியான தகவல்களுக்கு...
மே 11 முதல் தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பு?: ராதிகா, குஷ்பு விளக்கம்!
Updated on
2 min read


மே 11 முதல் தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பாகவுள்ளன என்று வெளியான தகவல்களுக்கு சின்னத்திரையில் முக்கியப் பங்கு வகிக்கும் நடிகைகளான ராதிகாவும் குஷ்புவும் ஆடியோ வழியாக விளக்கம் அளித்துள்ளார்கள்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, 21 நாள் தேசிய ஊரடங்கை பிரதமா் மோடி கடந்த மாதம் 24-ஆம் தேதி அறிவித்தாா். பிறகு, தேசிய அளவிலான ஊரடங்கை மேலும் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார். கரோனா தொற்று பரவலின் தீவிரத்தை அறிந்து, ஊரடங்கை மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைப்படம் மற்றும் சின்னத்திரைப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பல தொலைக்காட்சிகளில் பழைய டிவி தொடர்களும் திரைப்படங்களும் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்நிலையில் மே 11 முதல் தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பாகவுள்ளதாகவும் படப்பிடிப்புகள் மே முதல் வாரத்திலிருந்து தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து சின்னத்திரையில் முக்கியப் பங்கு வகிக்கும் நடிகைகளான ராதிகாவும் குஷ்புவும் ஆடியோ வழியாக விளக்கம் அளித்துள்ளார்கள்.

ஆடியோவில் குஷ்பு கூறியதாவது:

மே 5-ல் படப்பிடிப்பு தொடங்கி, மே 11 முதல் தொடர்கள் ஒளிபரப்பாக வேண்டும் என தொலைக்காட்சி நிறுவனங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். பெப்சி தலைவர் செல்வமணியிடம் இதுபற்றி பேசினேன். சுகாரத்துறை அமைச்சரிடமும் பேசினேன். பரிசோதனைகள் தற்போதுதான் அதிகளவில் செய்வதால் ஏப்ரல் 27-ம் தேதி வாக்கில் தான் படப்பிடிப்புகள் ஆரம்பிப்பது பற்றிப் பேசமுடியும் என்று கூறிவிட்டார். வெளிப்புறப் படப்பிடிப்புக்குச் செல்லாமல், முக்கியமான நடிகர்களை மட்டும் வைத்து படப்பிடிப்பு நடத்த முயற்சி செய்யுங்கள் என்றார். மே 11-க்குப் பதிலாக இன்னும் ஒரு வாரம் தள்ளி வைத்தால் தெளிவாகக் கூற முடியும். அப்படிப் படப்பிடிப்பு நடக்கும்போது ஒருநாளில் அதிகமான எபிசோட்களைப் படமாக்கப் பாருங்கள். ஒவ்வொரு நிமிடமும் பணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்று பேசியுள்ளார்.

குஷ்புவின் ஆடியோ பதிவைத் தொடர்ந்து ராதிகாவும் ஓர் ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

குஷ்பு பேசியதைக் கேட்டேன். தொலைக்காட்சி நிறுவனங்கள் மே 5 முதல் படப்பிடிப்புக்குச் செல்லுங்கள் என்று சொல்லவில்லை. கதையைத் தயார் செய்து படப்பிடிப்புக்குத் தயாராக இருக்கும்படி தான் கூறியுள்ளன. சென்னையில் அதிக பாதிப்பு உள்ளது. எனவே படப்பிடிப்பு பற்றி இப்போது யோசிக்க முடியாது. நிலைமை மாறிய பிறகு தயாரிப்பாளர்களுடன் பேசி முடிவு செய்வோம். கோடம்பாக்கம் ஹாட் ஸ்பாட்டில் உள்ளது. ஆள் நடமாட்டமே இல்லாத நிலையில் படப்பிடிப்பு பற்றி யோசிக்க முடியாது. இந்தச் சூழலைச் சமாளித்து எப்படித் திட்டமிட்டுப் பணியாற்றப் போகிறோம் என்பதைப் பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com