இர்பான் கான் உடல் நல்லடக்கம்: இறுதிச்சடங்குகளை செய்த மகன்கள்

இர்பான் கானின் இறுதிச்சடங்கு குறித்து அவர்கள் குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
இர்பான் கான் உடல் நல்லடக்கம்: இறுதிச்சடங்குகளை செய்த மகன்கள்
Published on
Updated on
1 min read

உடல்நலக்குறைவால் உயிரிழந்த பாலிவுட் நடிகர் இர்பான் கானின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 53. இர்பான் கான், 1988 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வந்தார். 2011-ல் பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். 2018-ல் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் இர்பான் கான். லண்டனில் இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார்.

சில நாள்களுக்கு முன்பு இர்பான் கானின் தாய் காலமனார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இர்பான் கான், மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமாக இருந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இர்பான் கான் இன்று காலமானார். அவருக்கு சுதாபா சிக்தர் என்கிற மனைவியும் இரு மகன்களும் உண்டு.

இர்பான் கானின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். பிரதமர் மோடி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் இர்பான் கானின் இறுதிச்சடங்கு குறித்து அவர்கள் குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மும்பையில் இன்று மாலை 3 மணிக்கு இர்பான் கானின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்வில் குடும்பத்தினர்களும் நெருங்கிய நண்பர்களும் கலந்துகொண்டார்கள். அனைவரும் இர்பான் கானுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இர்பான் கானின் மகன்களான பாபில், அயன் ஆகிய இருவரும் இறுதிச் சடங்குகளைச் செய்தார்கள். இர்பான் கானின் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மட்டுமே இந்நிகழ்வில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மும்பையின் வெர்சோவா கப்ரிஸ்தானில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் இர்பானின் திரையுலக நண்பர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. எனினும் இர்பானின் நண்பரும் இயக்குநருமான விஷால் பரத்வாஜ், இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com