சுசாந்த் சிங்கின் காதலி ரியாவை 8 மணி நேரம் விசாரித்த அமலாக்கத்துறை

நடிகர் சுசாந்த் சிங்குடனான பணப் பரிமாற்றத் தகவல்கள் குறித்து நடிகை ரியா மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம்... 
சுசாந்த் சிங்கின் காதலி ரியாவை 8 மணி நேரம் விசாரித்த அமலாக்கத்துறை

நடிகர் சுசாந்த் சிங்குடனான பணப் பரிமாற்றத் தகவல்கள் குறித்து நடிகை ரியா மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் அமலாக்கத்துறை 8 மணி நேரம் விசாரணை செய்துள்ளது.

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34), கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது மரணம் நாடு முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மன அழுத்தம் காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இதுதொடா்பாக மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சுசாந்த் சிங்கின் தந்தை கிருஷ்ண குமாா் சிங் (74) நடிகை ரியா மற்றும் அவரது குடும்பத்தினா் மீது சுசாந்தை தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகாா் அளித்திருந்தாா். கடந்த ஆண்டு மே மாதம் தனது மகனுடனான உறவை ரியா துண்டித்து விட்டதாகவும் அவா் கூறியிருந்தாா். சுசாந்த் சிங்கின் மரணம் தொடா்பாக அவரது காதலியும், நடிகையுமான ரியா மற்றும் சிலா் மீது பிகாா் காவல்துறையினர் பணமோசடி குற்றச்சாட்டின் கீழ், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா். மேலும், சுசாந்த் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பது குறித்து அமலாக்கத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பிகாா் காவல்துறையிடம் முதல் தகவல் அறிக்கையை அமலாக்கத்துறை கோரியது.

சுசாந்த் ராஜ்புத் மரணச் சம்பவம் தொடா்பாக அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது. சுசாந்த் சிங் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 15 கோடி சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிகாா் காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அவர் சம்பாதித்த பணத்தை பண மோசடி செய்தவற்கும், சட்டவிரோதமாகச் சொத்துகளை வாங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டதா என அமலாக்கத்துறை விசாரிக்கவுள்ளது. 

சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடா்பான வழக்கு விசாரணையை சிபிஐக்குப் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா். சிபிஐக்குப் பரிந்துரைக்க பிகார் அரசு முடிவு செய்ததை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுசாந்த் சிங் காதலி ரியா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகார் காவல்துறை 6 பிரிவுகள் ரியா மீது வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை சிபிஐ மேற்கொண்டுள்ளது. சிபிஐயின் சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது.

சுசாந்த் சிங் வழக்கு தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நடிகை ரியா நேற்று ஆஜர் ஆனார். தனது சகோதரர் சோவிக்குடன் இணைந்து காலை 11.50 மணிக்கு அமலாக்கத்துறை இயக்குனரக அலுவலகத்துக்கு வந்தார். விசாரணையின்போது சுசாந்த் சிங் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 15 கோடி சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரியா தெரிவித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. சுசாந்த் சிங் மரண வழக்கு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் விசாரணையைத் தள்ளிவைக்கும்படி ரியா வைத்த கோரிக்கை மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் நேரில் ஆஜராகி, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்தார். 

நேற்று, தனது சகோதரருடன் முதலில் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு ரியா வந்தார். பிறகு ரியாவின் முன்னாள் மேலாளர், கணக்காளர் ஆகியோரும் வந்துள்ளார்கள். 

சுசாந்த் சிங்கின் வங்கிக் கணக்கு, நிதி விவரங்கள் தொடர்பான 20 கேள்விகள் ரியாவிடம் கேட்கப்பட்டன. பெரும்பாலான கேள்விகள் தனக்குத் தொடர்பில்லாதவை என ரியா பதில் அளித்துள்ளார். ரியா குடும்பத்தின் சொத்து விவரங்கள் பற்றிய கேள்விகளுடம் அவரிடம் கேட்கப்பட்டன. மேலும் ரியாவின் ஒட்டுமொத்தக் குடும்பத்தினரின் சொத்து மற்றும் வருமான விவரங்களையும் அமலாக்கத்துறை நேற்றைய விசாரணையின் மூலம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சுசாந்துடனான பணப் பரிமாற்றம் தொடர்பான கேள்விகளையும் ரியா எதிர்கொண்டுள்ளார். சுசாந்த், ரியா மற்றும் அவருடைய சகோதரர் என மூவரும் ஆரம்பித்த இரு நிறுவனங்களின் விவரங்கள் குறித்தும் நேற்றைய விசாரணையில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு ரியாவின் வங்கிக் கணக்கு விவரங்கள், சுசாந்தின் வங்கிக் கணக்கில் இருந்து பெறப்பட்ட பண விவரங்கள் ஆகியவற்றின் தகவல்களை வழங்குமாறு ரியாவிடம் கட்டளையிட்டுள்ளது அமலாக்கத்துறை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com