அய்யப்பனும் கோஷியும் பட தமிழ் ரீமேக்கில் நடிக்கிறேனா?: பார்த்திபன் பதில்

இதுவரை தயாரிப்பாளர் கதிரேசனை தவிர அனைவரும் என்னிடம் பேசிவிட்டார்கள்...
அய்யப்பனும் கோஷியும் பட தமிழ் ரீமேக்கில் நடிக்கிறேனா?: பார்த்திபன் பதில்

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மலையாளப் படமான அய்யப்பனும் கோஷியும் ஏராளமான ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. பிரிதிவிராஜ், பிஜூ மேனன் நடிப்பில் சச்சி இயக்கிய இப்படம் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது. 

அய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கி, அதிக கவனம் பெற்ற இயக்குநர் சச்சி சமீபத்தில் காலமானார். அவருக்கு வயது 48.

தமிழ் ரீமேக்கில் சசிகுமாரும் சரத்குமாரும் நடிப்பதாக இருந்த நிலையில் தற்போது பிஜூ மேனன் வேடத்தில் பார்த்திபனும் பிரிதிவிராஜ் வேடத்தில் கார்த்தியும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தைச் சேர்ந்த கதிரேசன், தமிழ் ரீமேக்கின் உரிமையைப் பெற்றுள்ளார். 

அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக் குறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் தான் நடிப்பதாக வெளியான செய்திகளுக்கு நடிகர் பார்த்திபன் மறுப்பு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இதுதொடர்பாக ஒருவருக்கு அளித்த பதிலில் பார்த்திபன் கூறியதாவது:

இச்செய்தி நற்செய்தி ஆகலாம்! ஆனால் இதுவரை தயாரிப்பாளர் கதிரேசனை தவிர அனைவரும் என்னிடம் பேசிவிட்டார்கள் என்று பதில் அளித்துள்ளார்.

அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் யார் யார் நடிக்க வேண்டும் என்பது குறித்து இறப்பதற்கு முன்னதாக பதில் அளித்துள்ளார் இயக்குநர் சச்சி. ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

தமிழ் ரீமேக்கைக் காண ஆவலாக உள்ளேன். தமிழில் பிரமாதமான நடிகர்கள் இருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மனம் திறந்து பாராட்டினார். தமிழில் கோஷி வேடத்தில் கார்த்தியும் அய்யப்பன் வேடத்தில் பார்த்திபனும் நடித்தால் நன்றாக இருக்கும்.

பார்த்திபன் ஒரு சுவாரசியமான நடிகர். அவருடைய நடிப்பை நீண்ட காலமாகக் கவனித்து வருகிறேன். தமிழில் இவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என நான் கருதினாலும் பட்ஜெட்டைப் பொறுத்து தயாரிப்பு நிறுவனம் தான் இதுபற்றி முடிவு செய்யவேண்டும். ஹிந்தியில் பிஜூ மேனன் வேடத்தில் நானா படேகரும் பிரித்விராஜ் வேடத்தில் ஜான் ஆபிரஹாம் அல்லது அபிஷேக் பச்சன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com