நடிகை சித்ரா மரணம்: சிபிசிஐடி விசாரிக்க தாயார் மனு
நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி முதல்வரின் தனிப்பிரிவில் அவருடைய தாயார் மனு அளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ஆம் தேதி பூந்தமல்லி அருகே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்தைக் கைது செய்து, பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனா்.
ஹேம்நாத்தும், சித்ராவும் ஏற்கெனவே பதிவு திருமணம் செய்து கொண்டதால் சித்ராவின் மரணம் குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ, கோட்டாட்சியா் அலுவலகத்தில் சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா, அக்கா சரஸ்வதி, அண்ணண் சரவணன் ஆகியோரிடமும், ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாயாா் வசந்தா ஆகியோரிடமும், ஹேம்நாத்திடமும் விசாரணை நடத்தினாா்.
சித்ராவின் உதவியாளா் ஆனந்திடம் வருவாய் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ கடந்த வாரம் 2 மணி நேரம் விசாரணை நடத்தியதைத் தொடா்ந்து, விசாரணை முடிவுக்கு வந்தது. இதையடுத்து, விசாரணை அறிக்கையை கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ காவல்துறையிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்நிலையில் சித்ரா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி முதல்வரின் தனிப்பிரிவில் சித்ராவின் தாயார் விஜயா மனு செய்துள்ளார். இந்த வழக்கில் முறையான விசாரணை நடைபெறவில்லை. இதனால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.