

தமிழ்த் திரையுலகில் அதிக வசூலில் இன்றைக்கும் ரஜினியின் படங்கள் தான் முன்னணியில் உள்ளன. 69 வயதான பின்பும் வெகுஜனப் படங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை மேலும் பெரிதுபடுத்தி வருகிறார். 2010-களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் ரஜினி என்றால் யார் எனத் தெரியும். அந்தக் கூட்டத்தையும் ரஜினி கவர்ந்துள்ளார்.
சமீபகாலமாக ரஜினிக்கு ஆந்திரா, தெலங்கானா, வட இந்தியா போன்ற பகுதிகளிலும் புதிய ரசிகர்கள் பெருகியுள்ளார்கள். ரஜினிக்கு வயதானாலும் அவருடைய சினிமா வாழ்க்கையிலும் துளியும் தொய்வு ஏற்படவில்லை.
2007-ல் வெளியான சிவாஜி முதல் சமீபத்தில் வெளியான பேட்ட வரை ரஜினி நடித்த படங்களில் கோச்சடையான், லிங்கா, குசேலன் தவிர அனைத்தும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளன. சிவாஜி, எந்திரன், கபாலி, காலா, பேட்ட என ரஜினியின் சமீபத்திய படங்கள் அனைத்தும் ரஜினியின் புகழ் இன்னும் குறையவில்லை என்பதற்கு ஆதாரங்களாக அமைந்துள்ளன.
இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, இளம் இயக்குநர்களை நம்பி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கும் ரஜினியின் துணிச்சல்.
2000-ம் ஆண்டு முதல் 2010 வரை ரஜினியின் படங்களை இயக்கியவர்கள் - சுரேஷ் கிருஷ்ணா, பி. வாசு, ஷங்கர் போன்ற மூத்த இயக்குநர்கள் மட்டுமே.
ஆனால் 2010-க்குப் பிறகு ரஜினி முற்றிலும் புதிய பாதையில் பயணித்து வருகிறார். மூத்த இயக்குநர்களுக்குப் பதிலாக சமீபத்தில் வெற்றி கண்ட மற்றும் இளம் இயக்குநர்களை முழுதாக நம்புகிறார். இதனால் தான் கடந்த 9 வருடங்களில் ரஜினியின் படங்களை இயக்கும் பொறுப்புகள் - செளந்தர்யா ரஜினிகாந்த், கே.எஸ். ரவிக்குமார், பா. இரஞ்சித், ஷங்கர், கார்த்திக் சுப்புராஜ், ஏ.ஆர். முருகதாஸ், சிவா ஆகியோருக்குக் கிடைத்துள்ளன.
இவர்களில் ஷங்கரும் ரவிகுமாரும் மட்டுதான் அனுபவஸ்தர்கள். செளந்தர்யா, பா. இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், ஏ.ஆர். முருகதாஸ் ஆகிய இயக்குநர்களிடம் முதல்முறையாக நடித்துள்ளார் ரஜினி. ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கும் சிவாவும் இதே வரிசையில் வருபவர் தான்.
ரஜினி போன்ற ஒரு சூப்பர் ஸ்டார், நம்பிக்கையுடன் இயக்குநர்களிடம் முழு பொறுப்பையும் ஒப்படைப்பதால் பல விதமான படங்களில் நடிப்பதோடு அதிக வெற்றிகளையும் பெற முடிகிறது.
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற தர்பார் பட விழாவில் பேசிய ரஜினி, என்னுடைய சுறுசுறுப்புக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம் இவைதான். கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக வருத்தப்படுங்கள், கொஞ்சமாகச் சாப்பிடுங்கள், கொஞ்சமாகத் தூங்குங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாகப் பேசுங்கள். இதை எல்லாம் செய்தால் சந்தோஷமாக வாழலாம் என்றார்.
ரஜினியின் திரையுலக வெற்றிகளுக்கான ரகசியம் என்று அவருடைய புத்திசாலித்தனமான முடிவுகளைச் சொல்லலாம். அதுதான் அவரைத் தொடர்ந்து வசூல் மன்னனாக நீடிக்க வைக்கிறது.
ரஜினி இதுபோல விதவிதமான படங்களில் நடித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் ரசிகர்கள் பலருடைய விருப்பம். தர்பாரின் வெற்றி ரஜினியை அந்த முடிவை நோக்கி பயணிக்க வைக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.