

தனது கணவர் பீட்டர் பால் மீது அவருடைய முதல் மனைவி எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் குறித்து நடிகை வனிதா விஜய்குமார் பதில் அளித்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் - விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் ஆகியோரின் திருமணம் சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது.
1995-ல் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வனிதா விஜயகுமார், கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகப் புகழை அடைந்தார்.
நடிகர் ஆகாஷை முதலில் திருமணம் செய்த வனிதா, 2007-ல் அவரை விவாகரத்து செய்தார். ஆனந்த் ராஜனை 2007-ல் திருமணம் செய்தார் வனிதா. பிறகு 2012-ல் ஆனந்த் ராஜனையும் வனிதா விவாகரத்து செய்தார். வனிதாவுக்கு விஜய ஸ்ரீஹரி என்கிற மகனும் ஜோவிதா, ஜெய்நிதா என்கிற இரு மகள்களும் உள்ளார்கள். மகன் ஸ்ரீஹரி ஆகாஷுடனும் இரு மகள்கள் வனிதாவுடனும் வசித்து வருகிறார்கள்.
சென்னை போரூரில் உள்ள வனிதாவின் இல்லத்தில் கிறிஸ்துவ முறைப்படி விஜயகுமார் - விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டும் கலந்துகொண்டார்கள்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் (41), வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளன. என்னிடம் விவாகரத்து பெறாமல் மற்றொரு திருமணம் செய்துள்ளார் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திருமணத்துக்குச் சில நாள்களுக்கு முன்பே அவர் இந்தப் புகாரை அளித்துள்ளார்.
இந்தப் புகாருக்கு வனிதா விஜயகுமார் பதில் அளித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
எலிசபெத் ஹெலன் கொடுத்த புகாரினால் நான் ஏமாந்துவிட்டதாகப் பலரும் எண்ணுகிறார்கள். நான் ஏமாறவில்லை. எட்டு வருடங்களுக்கு முன்பே மனைவியைப் பிரிந்துவிட்டார் பீட்டர். அவரைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும். இருவரும் தனித்தனியாகத்தான் வாழ்ந்துவந்தார்கள். அவர்களுக்கிடையே எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது. இந்தப் பிரச்னையை எங்கள் வழக்கறிஞர் பார்த்துக்கொள்வார்கள்.
அவர்கள் ஒரு கோடி ரூபாய் கேட்பதாகச் சொல்கிறார்கள். அவ்வளவு பணத்துக்கு நாங்கள் எங்கே போவது? இந்தப் புகாரினால் எனது திருமண வாழ்க்கையில் எந்தப் பிரச்னையும் இல்லை. பணம் பறிப்பதற்காக இப்படிச் செய்கிறார்கள். எனவே இந்தப் பிரச்னையைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.