இரண்டாம் குத்து பட டீசரை சமூகவலைத்தளங்களில் இருந்து நீக்கவேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

டீசரில் இரட்டை அர்த்தங்களுடன் நாகரீகமற்ற காட்சிகள் அமைந்துள்ளதால்...
இரண்டாம் குத்து பட டீசரை சமூகவலைத்தளங்களில் இருந்து நீக்கவேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
Published on
Updated on
1 min read

இரண்டாம் குத்து படத்தின் டீசரைச் சமூகவலைத்தளங்களில் இருந்து நீக்கவேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஹரஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இதற்கு அடுத்ததாக இரண்டாம் குத்து என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகனாகவும் அவர் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டரும் டீசரும் சமீபத்தில் வெளியாகின. தீபாவளி அன்று இந்தப் படம் வெளியிடப்படுகிறது. 

இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர், டீசருக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டார். இதேபோல, இரண்டாம் குத்து படத்துக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

சென்னை உயா் நீதிமன்ற மதுரைக்கிளையில் மதுரையைச் சோ்ந்த பெருமாள் தாக்கல் செய்த மனு:

தற்போது இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தின் டீசா் வெளியாகியுள்ளது. இந்த டீசா் காட்சியை வெளியிட்ட சில மணி நேரத்தில் பல லட்சம் பாா்வையாளா்கள் பாா்த்துள்ளனா். அதில் சமூகத்தை சீா்குலைக்கும் விதமாக பல வசனங்கள் அமைந்துள்ளன. அதில் சில வசனங்கள் இரட்டை அா்த்தத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளைச் சீரழிக்கும் விதமாக அமைந்துள்ளன. தற்போது கரோனா காலம் என்பதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. இதனால் இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளது. இத்தகையைச் சூழலில் சமூகத்தை சீா்குலைக்கும் விதமாக வெளியிடப்படும் திரைப்படங்கள் மூலம் மாணவா்கள் தவறான பாதையில் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே இரண்டாம் குத்து திரைப்படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும். மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள படத்திற்கான டீசரை சமூக வலைதளங்களிலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும். படத்தின் தயாரிப்பாளா், இயக்குநா், வெளியீட்டாளரிடம் ரூ.5 கோடி இழப்பீடு வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில், இரண்டாம் குத்து படத்தின் டீசரை சமூகவலைத்தளங்களில் இருந்து நீக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. டீசரில் இரட்டை அர்த்தங்களுடன் நாகரீகமற்ற காட்சிகள் அமைந்துள்ளதால் சமூக வலைத்தளங்களில் இருந்து உடனடியாக நீக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக உள்துறைச் செயலர், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com