பாலா இயக்கிய வர்மா: ஐந்து ஓடிடி தளங்களில் வெளியீடு!

பாலா இயக்கியுள்ள வர்மா படம் ஐந்து ஓடிடி தளங்களில் இன்று வெளியாகியுள்ளது...
பாலா இயக்கிய வர்மா: ஐந்து ஓடிடி தளங்களில் வெளியீடு!
Published on
Updated on
1 min read

பாலா இயக்கியுள்ள வர்மா படம் ஐந்து ஓடிடி தளங்களில் இன்று வெளியாகியுள்ளது.

அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது. 

இந்தப் படம் தமிழில் வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆனது. பிரபல இயக்குநர் பாலா இயக்கினார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக இப்படத்தின் மூலமாக அறிமுகமானார். வங்காள நடிகையான மேகா செளத்ரி, துருவ் ஜோடியாக நடித்தார். ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா போன்றோரும் இப்படத்தில் நடித்தார்கள். இயக்குநர் ராஜூ முருகன் வசனம் எழுதினார். அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன், வர்மா படத்துக்கும் இசையமைத்தார்.

கடந்த வருடம் பிப்ரவரி 14 அன்று வெளிவருவதாக இருந்த வர்மா படம் திடீரென கைவிடப்பட்டது. படத்தின் இறுதி வடிவம் குறித்து பாலா - தயாரிப்பாளர் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இந்த நிலை உருவானது. 

அதன் தொடர்ச்சியாக வர்மா என்கிற தலைப்பு ஆதித்ய வர்மா என மாற்றப்பட்டது. சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அர்ஜூன் ரெட்டி புதிய தமிழ் ரீமேக்குக்கு, ஹிந்திப் படமான அக்டோபர் படத்தில் அறிமுகமாகிக் கவனம் பெற்ற பனிதா சந்து கதாநாயகியாகத் தேர்வானார்.  ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு ரவி கே. சந்திரன் தமிழில் மீண்டும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். இந்தப் படம் நவம்பர் 22 அன்று வெளியானது. 

ஆதித்ய வர்மா படம் திரையரங்கில் வெளியானாலும் பாலாவின் வர்மா படத்தைப் பார்க்க பலரும் ஆர்வம் காண்பித்தார்கள். இதையடுத்து ஐந்து ஓடிடி தளங்களில் வர்மா படம் இன்று முதல் வெளியாகியுள்ளது.

சிம்பிளி செளத் (Simply South), டெண்ட்கொட்டா (Tentkotta) ஆகிய ஓடிடி தளங்களில் இந்தியாவுக்கு வெளியே உள்ளவர்கள் வர்மா படத்தைப் பார்க்க முடியும். அதேபோல இந்தியாவில் தி ஏலி (The-Ally), ஷ்ரேயாஸ் ஈடி (Shreyas ET), ஷெமரூமீ (ShemarooMe) ஆகிய ஓடிடி தளங்களில் வர்மா வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com