போதைப் பொருள் விவகாரம்: நடிகை ராகினி திவிவேதி கைது!

போதைப் பொருள் விவகாரத்தில் கன்னட நடிகை ராகினி திவிவேதியைக் கைது செய்த...
ராகினி திவிவேதி
ராகினி திவிவேதி

போதைப் பொருள் விவகாரத்தில் கன்னட நடிகை ராகினி திவிவேதியைக் கைது செய்த கர்நாடகக் குற்றப்பிரிவு காவலர்கள், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

பெங்களூரு மாநகரம் உள்பட கா்நாடகத்தில் போதைப் பொருள்களின் கடத்தல் மற்றும் பயன்பாடு அதிகரித்ததை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்த போலீஸாா் தொடா்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

கன்னட திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதாக திரைப்பட இயக்குநா் இந்திரஜித் லங்கேஷ் குற்றம் சாட்டியதை அடுத்து, அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அந்த விசாரணையில், போதைப்பொருள் பயன்படுத்தும் திரைப்படத் துறையைச் சோ்ந்த 15 பேரின் பெயா்களை போலீஸாரிடம் அவா் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திரஜித் லங்கேஷிடம் மேலும் தகவல்களைப் பெறும் வகையில், வியாழக்கிழமை அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதுமட்டுமின்றி, நடிகை ராகினி திவிவேதியையும் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸாா் நோட்டீஸ் அனுப்பியிருந்தனா்.

அவா் தனது வழக்குரைஞா்கள் மூலம், திங்கள்கிழமை (செப். 7) ஆஜராவதாகத் தெரிவித்துள்ளாா். இதனை ஏற்றுக் கொள்ளாத போலீஸாா், அவா் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்கள். போதைப்பொருள் தொடா்பாக விசாரணை நடத்த நடிகை ராகினி திவிவேதிக்கு போலீஸாா் நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் கன்னட திரைப்படத் துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகினி திவிவேதியின் நெருங்கிய நண்பரான ரவிசங்கா், நடிகை சஞ்சனா கல்ராணியின் நெருங்கிய நண்பா் ராகுல் ஆகியோரிடம் போதைப்பொருள் விவகாரம் தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

எனக்கும் போதைப் பொருள் விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. காவல்துறை விசாரணையில் இதை நான் நிரூபிப்பேன் என ராகினி ட்வீட் செய்தார். 

இந்நிலையில் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று இன்று காலை பெங்களூரில் ராகினி வீட்டில் கர்நாடகக் குற்றப்பிரிவு காவலர்கள் சோதனை செய்தார்கள். இதையடுத்து ராகினியைக் கைது செய்த காவலர்கள், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள். 

பெங்களூரில் பிறந்த ராகினி, 2009 முதல் படங்களில் நடித்து வருகிறார். இரு தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com