கோரிக்கைகள் ஏற்றால் மட்டுமே புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகும்: தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே புதிய படங்கள் வெளியாகும் எனத் திரையரங்க உரிமையாளர் சங்கத்துக்கு...
கோரிக்கைகள் ஏற்றால் மட்டுமே புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகும்: தயாரிப்பாளர்கள்
Published on
Updated on
1 min read

தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே புதிய படங்கள் வெளியாகும் எனத் திரையரங்கு உரிமையாளர் சங்கத்துக்கு பாரதிராஜா தலைமையில் இயங்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடி 160 நாள்களுக்கு மேல் ஆகின்றன. கடந்த ஐந்து மாதங்களாக ஊரடங்கு உத்தரவால் அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். எனவே, கரோனா ஊரடங்குத் தளர்வில் திரையரங்குகளை உரிய விதிமுறைகளுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். 

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் திரையரங்குகள் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

இந்நிலையில் பாரதிராஜா தலைமையில் இயங்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்துக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் எங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் புதிய படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம்.

கடந்த 10 வருடங்களாக கியூப் கட்டணத்தை தயாரிப்பாளர்களாகிய நாங்கள் செலுத்தி வருகிறோம். இனி அக்கட்டணத்தை எங்களால் செலுத்த முடியாது.

வருமானப் பகிர்வில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். விரைவில் நாம் கூட்டாகப் பேசி திரையரங்குகள் திறக்கும் முன்பு முடிவு செய்ய வேண்டும்.

திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரத்தில் கிடைக்கும் வருவாயில் படத்தின் தயாரிப்பாளருக்கும் பங்கு தேவை. 

ஆன்லைன் டிக்கெட் முறையில் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தர வேண்டும். இவ்வாறு, எங்களுடைய இந்தக் கோரிக்கைகளை பரிசீலனை செய்யவேண்டும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com