தொலைக்காட்சியில் உதவி செய்யவில்லை: வடிவேல் பாலாஜி மரணம் பற்றி நடிகர் சேது பேட்டி

ஒவ்வொரு மேடைக் கலைஞனும் பலகுரல் கலைஞனும் மன உளைச்சலில் தான் உள்ளார்கள்.
தொலைக்காட்சியில் உதவி செய்யவில்லை: வடிவேல் பாலாஜி மரணம் பற்றி நடிகர் சேது பேட்டி

கரோனா ஊரடங்கின்போது வருமானம் இன்றித் தவிக்கும் கலைஞர்களுக்கு அரசாங்கமோ தொலைக்காட்சியோ உதவி செய்யவில்லை என நடிகர் சேது குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையை பூா்வீகமாகக் கொண்ட வடிவேல் பாலாஜி,  மிமிக்ரி கலைஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கினாா்.  திருவிழா மேடை நிகழ்ச்சிகளில் நடிகா் வடிவேலுவின் உடல்மொழியும் அவரைப் போன்ற குரல் கொண்டவராகவும் திகழ்ந்ததால் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டாா். தொலைக்காட்சி சேனல்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் இடம் பெற்று பிரபலமானாா். குறிப்பாக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த  ‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’, ‘கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ்’ உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளாா்.  

வடிவேலு மாதிரியான தோற்றங்களில் நடித்து வந்ததால், இவருக்கென தனி ரசிகா் வட்டம் இருந்து வந்தது. சின்னத்திரையில் பிரபலமானதைத் தொடா்ந்து,  படங்களிலும் நடிக்கத் தொடங்கினாா்.  ‘யாருடா மகேஷ்’,  ‘கோலமாவு கோகிலா’ உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட  படங்களில் நடித்துள்ளாா்.  கரோனா பொது முடக்கத்துக்குப் பின்  சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டதால், சில நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பில் தொடா்ந்து பங்கேற்று வந்தாா். 

இந்நிலையில் நடிகா்  வடிவேல் பாலாஜி (42)   மாரடைப்பு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா். 

இரு வாரங்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வடிவேல் பாலாஜி சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். பிறகு அவருக்கு மீண்டும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வடிவேல் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணமடைந்தார். வடிவேல் பாலாஜிக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.  இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன. 

வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நேரில் செலுத்திய நடிகர் சேது, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடிவேல் பாலாஜிவைப் போன்ற ஒரு கலைஞன் வேறு யாரும் இல்லை. அவர் இடத்தை இனி நிரப்ப முடியாது. என்னுடன் வெளிநாடுகளுக்கு வந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அவரைப் போல உடனடியாக டைமிங்குடன் நகைச்சுவையை யாராலும் பேச முடியாது. ஸ்கிரிப்ட் இல்லாவிட்டாலும் தைரியமாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். அவர் கோபப்பட்டு நான் பார்த்தது இல்லை. எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார். இதனால்தான் தற்போது எல்லோரும் அதிர்ச்சியில் உள்ளோம். ஒரு நல்ல சகோதரரை இழந்துள்ளோம். என் அம்மா இறந்த பிறகு இன்றுதான் நான் அழுகிறேன். 

வாழ்வாதாரம் அடிபட்டிருக்கிறது. அதனால் இன்றைக்கு ஒவ்வொரு மேடைக் கலைஞனும் பலகுரல் கலைஞனும் மன உளைச்சலில் தான் உள்ளார்கள். எவ்வித வருமானமும் இல்லை, யாரும் உதவி செய்யவில்லை. அரசாங்கம் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. தொலைக்காட்சியிலும் எதுவும் செய்யவில்லை. ஊடகமும் தொலைக்காட்சிகளும் இதுபோன்ற கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இதுபோன்ற நேரத்தில் உதவி செய்ய வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com