‘நான் உங்க ஃபிரெண்டுன்னு சொல்லுங்க போதும்': கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல்

இவ்வளவு மரியாதையால்லாம் என்னை யார்க்கிட்டயும் அறிமுகப்படுத்தாதீங்க...
படம் - twitter.com/idiamondbabu
படம் - twitter.com/idiamondbabu

தேசிய விருது பெற்ற கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி காலமானார். அவருக்கு வயது 77.

நாடோடித் தென்றல், வண்ண வண்ணப் பூக்கள், இம்சை அரசன் 23-ம் புலிகேசி, நான் கடவுள் உள்ளிட்ட பல படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ள கிருஷ்ணமூர்த்தி, திரையுலகில் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் ஆடை வடிவமைப்பாளராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். பூம்புகாரில் பிறந்தவர். சென்னை கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றார். சிறந்த கலை இயக்குநராக மூன்று தேசிய விருதுகளும் சிறந்த ஆடை வடிவமைப்பாளராக இரு விருதுகளும் பெற்றுள்ளார். இறுதியாக, ராமானுஜன் படத்தில் கலை இயக்குநராகப் பணியாற்றினார். 

கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

இயக்குநர் பாராதிராஜா ட்விட்டரில் கூறியதாவது:

என் கலைதுறையில் என் கண்களில் என் இன்னொரு உணர்வை இழந்திருக்கிறேன்.

கிருஷ்ணமூர்த்தியின் மறைவு நம்ப முடியா ஒன்று.

வாடித் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை, ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:

தாஜ்மகால் படப்படிப்பில் நான் சின்னஞ்சிறு பட்டாம்பூச்சியாக சுற்றிக் கொண்டிருந்தபோது கிருஷ்ணமூர்த்தி அங்கிள் எனக்கு ஆதர்சமான தோள். கலைத்துறையில் நான் வியந்து பார்த்த முதல் மனிதர். நீண்ட முடியைச் சிலுப்பிக் கொண்டே அவர் பேசுவதை ஒரு சிறுமியாக வாய்பிளந்து பார்த்துக்கொண்டு நின்றதை நினைத்துப் பார்க்கிறேன். மகத்தான கலைஞனாக இருந்தாலும் யாரையும் தகுதி பார்த்துப் பிரிக்காமல் மதித்துப் பொருட்படுத்தி நட்பு பாராட்டும் குணம் இருக்க வேண்டும் என்பதை அவரிடம் கற்றுக் கொண்டேன். 

கலை இயக்குநராக விருதுகள் வாங்கி குவித்தவர். எந்த அகந்தையும் இல்லாத மாமனிதர். ‘உங்களுக்கு அஸிஸ்டென்டாகி விடவா’ என்று கேட்டதற்கு ‘நான் சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதையைத் திரைப்படமாக்கும் போது நீ எங்க இருந்தாலும் வந்துடு லீனா' என்றவர் இன்று மறைந்தே விட்டார். பல வருடங்களுக்கு முன் மடிப்பாக்கம் வீட்டில் அவருடைய ஸ்டூடியோவில் அவரே போட்டுக் கொடுத்த தேநீரைக் குடித்துக் கொண்டே சந்தித்துப் பேசியது நிழலாடுகிறது. 

என்னிடம் மட்டும் ரிசோர்சஸ் இருந்திருந்தால் உங்களை எப்படியாவது புளியமரத்தின் கதை படத்தை எடுக்க வைத்திருப்பேன். மன்னித்து விடுங்கள் அங்கிள். மிஸ் யூ என்றார்.

இயக்குநர் சுகா, ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:

கலைஞர்... 

‘இவ்வளவு மரியாதையால்லாம் என்னை யார்க்கிட்டயும் அறிமுகப்படுத்தாதீங்க, ஸார். நான் உங்க ஃபிரெண்டுன்னு சொல்லுங்க போதும்’.

அரங்குகள் அமைப்பது மட்டும் கலை இயக்குநரின் வேலை அல்ல என்பதை தனது நுண்ணியக் கலைவேலைப்பாடுகள் மூலம் உணர்த்தி என்னைப் போன்ற எண்ணற்றவர்களை அசரடித்த அவரை எப்படி வெறுமனே என்னுடைய நண்பர் என்று அறிமுகப்படுத்த முடியும்? அவருடைய எல்லா மேன்மைகளையும் சொல்லியேதான் யாருக்கும் அறிமுகப்படுத்துவேன். 

சுந்தரபாண்டியபுரத்தில் நாங்கள் இருவரும் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.

‘ஸார்! எனக்கு இந்த ஃபோட்டோ ஒரு காப்பி வேணுமே!’ என்று கேட்டு வாங்கிக் கொண்டார். என்னிடம் உள்ள அந்தப் புகைப்படத்தை இப்போது தேடிப் பார்க்கிறேன். காணோம். அதனாலென்ன? அவர் கடைசியாக என்னுடன்தான் பணிபுரிந்தார் என்னும் பெருமையும், அந்த சமயத்தில் எங்களுக்கு அமைந்த மறக்க முடியாத நினைவுகளும் போதுமே! 

நண்பர், கலைஞர் கிருஷ்ணமூர்த்தியின் ஆன்மா இறைநிழலில் இளைப்பாறட்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com