
மாஸ்டர் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறையினா் விசாரணை செய்து வருகிறார்கள்.
பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியானது. மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கிறார்கள்.
நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் பகுதியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் உள்ள நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விஜய் கடைசியாக நடித்த பிகில் படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தியுள்ள நிலையில் விஜய்யிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...