திரையிலும் வாழ்க்கையிலும் இணைந்த காதல் ஜோடிகள்!

இந்த ஜோடிகள் திரையில் ஒன்றாக நடித்ததோடு வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்து இன்று வரை வெற்றிகரமான காதல் வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள்...
திரையிலும் வாழ்க்கையிலும் இணைந்த காதல் ஜோடிகள்!

இந்த ஜோடிகள் திரையில் ஒன்றாக நடித்ததோடு வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்து இன்று வரை வெற்றிகரமான காதல் வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள். 

ராஜசேகர் - ஜீவிதா

Talambralu என்கிற படத்தில் ராஜசேகர் - ஜீவிதா ஆகிய இருவரும் ஒன்றாக நடித்துள்ளார்கள். அப்போது எனக்கு சென்னைத் தெலுங்கு தான் தெரியும் என்பதால் வசனம் பேசக் கஷ்டப்படுவேன். ஆனால், ஒரே டேக்கில் ஜீவிதா அசத்தி விடுவார். இந்தப் போட்டியே காதலாக மலர்ந்தது என்கிறார் ராஜசேகர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்துக்கு எதிர்ப்பு வந்துள்ளது. ஆனால் 1989-ல் ராஜசேகர் ஒரு விபத்தில் பலத்த காயமடைந்து ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டியிருந்தது. அப்போது கூடவே இருந்து ராஜசேகரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துள்ளார் ஜீவிதா. இதைக் கவனித்த ராஜசேகர் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதம் அளித்துள்ளார்கள். 1991-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

எங்களுடைய வெற்றிகரமான திருமணத்துக்கு முக்கியக் காரணம், ஜீவிதா தான் என்கிறார் ராஜசேகர். அவரால் தான் பொறுமையைக் கற்றுக்கொண்டேன் என்கிறார். ராஜசேகர் - ஜீவிதா ஜோடிக்கு இரு மகள்கள் உண்டு. 

கார்த்திக் - ராகினி

சோலைக்குயில் படத்தில் ஒன்றாக நடித்த கார்த்திக்கும் ராகினியும் பிறகு ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார்கள். இதன்பிறகு ராகினியின் சகோதரி ரதியை 1992-ல் திருமணம் செய்துகொண்டார் கார்த்திக். முதல் திருமணத்தின் மூலம் இரு மகன்களும் 2-வது திருமணத்தின் மூலம் ஒரு மகனும் உண்டு. 

அஜித் - ஷாலினி

இருவரையும் இணைத்த படம் - அமர்க்களம்.

படங்களில் நடிப்பதற்கு சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தலாம் என்றிருந்த ஷாலினி, அமர்க்களம் படத்துக்கு கதாநாயகன் அஜித் என்றதும் சம்மதம் சொல்லியிருக்கிறார். படப்பிடிப்பின்போது ஷாலினிக்குக் காயம் ஏற்பட, அப்போது அஜித் செய்த முதலுதவியும் வெளிப்படுத்திய கரிசனமும் ஷாலினியை அஜித் பக்கம் திருப்பியது. அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது இருவரின் காதலும் மலர்ந்தது. இருவரும் 2000-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்குப் பிறகு ஷாலினி நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். இருவருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. 

சூர்யா - ஜோதிகா

பூவெல்லாம் கேட்டுப் பார் படம் தோல்வியடைந்தாலும் சூர்யாவின் வாழ்க்கையைப் பொறுத்தவரை அது அவருடைய காதலைத் தொடங்கி வைத்த படம். நடிப்பில் அசத்திய ஜோதிகா மீது அவருக்கு ஏற்பட்ட பிரமிப்பு பிறகு காதலாக மாறியது. காக்க காக்க படத்தின் படப்பிடிப்பில் இருவரும் காதலைப் பகிர்ந்துகொண்டார்கள். 2006-ல் மிகவும் விமரிசையான முறையில் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். சூர்யா - ஜோதிகா ஜோடிக்கு ஒரு மகன், மகள் உண்டு.

அமலா - நாகார்ஜுனா

கொல்கத்தாவில் பிறந்த அமலா, 14 வயது முதல் சென்னை கலாஷேத்ராவில் 8 வருடங்கள் தங்கிப் பயின்றவர். மைதிலி என்னை காதலி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். 5 படங்கள் (Nirnayam, Siva, Prema Yuddham, Chinababu & Kirai Dada) ஒன்றாக நடித்து, காதலில் விழுந்த அமலாவும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் 1992-ல் திருமணம் செய்துகொண்டார்கள். இது நாகர்ஜுனாவின் 2-வது திருமணம். 1984-ல் நடிகர் வெங்கடேஷின் சகோதரி லக்‌ஷ்மி டகுபதியைத் திருமணம் செய்துகொண்ட நாகார்ஜுனா, 1990-ல் விவாகரத்து செய்துகொண்டார். (நாகார்ஜுனா - லக்‌ஷ்மியின் மகன் தான், நடிகர் நாக சைதன்யா.) அமலா, திருமணத்துக்குப் பிறகு நடிப்பதிலிருந்து விலகிக் கொண்டார். 2012-ல் மீண்டும் நடிக்க வந்தார். இருவருக்கும் அகில் என்கிற மகன் உண்டு.  

நாக சைதன்யா - சமந்தா

பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை 2017 அக்டோபரில் திருமணம் செய்துகொண்டார் சமந்தா. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறினார்கள். இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது.

ராம்கி - நிரோஷா

செந்தூரப்பூவே படத்தில் ஒன்றாக நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

முதலில் மோதலில் தான் காதல் ஆரம்பமானது. எனினும் ரயில் சம்பந்தப்பட்ட காட்சியில் இரண்டு ரெயில்களுக்கு இடையே நான் சிக்கிக் கொள்ள அவர் தான் என்னைக் காப்பாற்றினார். பிறகு என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில், நான் இருக்கேன். உனக்கு ஒன்றும் ஆகாது. தைரியமாக இரு என்றார். அப்போதுதான் மனதைப் பறிகொடுத்தேன் என்கிறார் நிரோஷா. 

தமிழ், தெலுங்கு என இருவரும் ஒன்றாக 10 படங்களில் நடித்துள்ளார்கள். வீட்டின் எதிர்ப்புக்கு மத்தியிலும் பல தடைகளையும் தாண்டியும் இருவரும் 1998-ல் திருமணம் செய்துகொண்டார்கள்.

சரத் குமார் - ராதிகா

நம்ம அண்ணாச்சி, சூர்யவம்சம் என இரு படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்கள் சரத் குமாரும் ராதிகாவும். பிறகு வாழ்க்கையிலும் இணைந்துகொண்டார்கள். 

1992-ல் ரிச்சர்ட் ஹார்டியைத் திருமணம் செய்துகொண்ட ராதிகா பிறகு கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்தார். 1984-ல் சாயாவைத் திருமணம் செய்த சரத் குமார், 2000-ம் ஆண்டில் விவாகரத்து செய்தார். அடுத்த ஆண்டு ராதிகாவைத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ராகுல் என்கிற மகன் உண்டு. முதல் திருமணத்தில் சரத் குமாருக்கு வரலட்சுமி, பூஜா என இரு மகள்களும் ராதிகாவுக்கு முதல் திருமணத்தில் ரயானே என்கிற மகளும் உண்டு. 

பிரசன்னா - சினேகா

2009-ல் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பிரசன்னாவும் சினேகாவும் இணைந்து நடித்தபோது இருவருக்குமிடையே காதல் உண்டானது. 2011-ல் காதலை வெளியுலகுக்கு அறிவித்தார் பிரசன்னா. 

2012-ல் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ஒரு மகன், மகள் உண்டு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com