பாரசைட் vs மின்சார கண்ணா: ஆஸ்கர் விருதுகளை வென்ற படத்துக்கு எதிராக வழக்கு தொடுப்பது சரியா?

இரு படங்களின் கதையும் நோக்கமும் செல்லும் திசையும் வேறு வேறு என்பது இரு படங்களையும் பார்த்தவர்களுக்கு நன்குப் புரியும்...
பாரசைட் vs மின்சார கண்ணா: ஆஸ்கர் விருதுகளை வென்ற படத்துக்கு எதிராக வழக்கு தொடுப்பது சரியா?

பாரசைட் vs மின்சார கண்ணா

இப்படி ஒரு போட்டி உருவாகி அது விவாதமாக, வழக்காக விஸ்வரூபம் எடுக்கும் என்று கடந்த வாரம் வரை யாரும் எண்ணியிருக்க முடியாது. ஆனால் இந்த விவகாரம் நாளுக்கு நாள் பல திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. ஒரு படத்தின் கடைசிக்கட்டம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பதுபோல இந்த விவகாரத்தின் முடிவையும் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். 

ஆஸ்கர் வென்ற ‘பாரசைட்‘ படம் மீது தமிழ்த் தயாரிப்பாளர் தேனப்பன் வழக்கு தொடுக்கவுள்ளதாக முடிவெடுத்திருப்பது தமிழ்த் திரையுலகிலும் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மின்சார கண்ணா மற்றும் பாரசைட் படங்களையும் ஒப்பிட்டு பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். பலருக்கும் தேனப்பனின் நடவடிக்கை விநோதமாகவே படுகிறது. 

ஆசியாவுக்குப் பெருமை சேர்த்த பாரசைட்

சா்வதேசத் திரையுலகமும், திரைப்பட ரசிகா்களும் ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்திருந்த 92-ஆவது ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. கொரிய மொழியில் எடுக்கப்பட்ட சா்வதேச அளவில் கவனம் ஈா்த்த ‘பாரசைட்’ திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த சா்வதேச திரைப்படம் (அயல்மொழி), சிறந்த இயக்குநா், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் 4 ஆஸ்கா் விருதுகளை அள்ளியது.

தென்கொரியாவில் முன்னணி இயக்குநரான போங் ஜூன் ஹோ, இந்தப் படத்தின் இயக்குநர். கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தை கொரிய சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஆசிய கண்டத்தில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இயக்குநர் என்ற சாதனையை படைத்துள்ளர் போங் ஜூன் ஹோ.

இந்தப் படம், தமிழ்ப் படமான மின்சார கண்ணா போல உள்ளது என்று எழுந்த சில கருத்துகள் தற்போது வழக்கு வரை சென்றுள்ளது. 

மின்சார கண்ணா - பாரசைட் படங்களுக்கு இடையிலுள்ள ஒற்றுமைகள்! 

ஏழ்மை காரணமாக, பணக்காரக் குடும்பத்தில் பொய் சொல்லி வேலைக்குச் சேர்கிறான் இளைஞன். பணக்கார வீட்டுப் பெண் அவனை விரும்புகிறாள். பிறகு மேலும் பல பொய்கள் சொல்லி தன் வீட்டு உறுப்பினர்களை அந்தப் பணக்கார வீட்டில் வேலைக்கு அமர்த்துகிறான். அந்தக் குடும்பத்தில் பணியாற்றும்போது கிடைக்கும் சொகுசு வாழ்க்கை அவர்களை ஈர்க்கிறது. ஆனால் அதுவே அவர்களுக்கு மேலும் பல சிக்களைக் கொண்டு வருகிறது. - இது பாராசைட் கதை. கதையை நேரடியாக மட்டும் சொல்லாமல் பல குறியீடுகளுடன் உணர்வுபூர்வமாகவும் ஆணித்தரமாகவும் வர்க்கப் பேதத்தை எடுத்துக் காட்டும் படம். இதனால்தான் இது ஆஸ்கர் வரை சென்று விருதுகள் வாங்கி சாதித்துள்ளது. 

பணக்காரரான விஜய், குஷ்புவின் தங்கையைக் காதலிக்கிறார். இதனால் அந்தப் பணக்காரக் குடும்பத்தில் பாதுகாவலர் போல உள்ளே நுழைகிறார். அப்படியே பணியாளர்களாக விஜய் குடும்பத்தினர் குஷ்புவின் வீட்டுக்குள் நுழைந்து விஜய்யின் காதலுக்கு உதவி செய்கிறார்கள். கடைசியில் குஷ்புவின் மனத்தை மாற்றி காதலியைக் கைப்பிடிக்கிறார் விஜய் - இது மின்சார கண்ணா கதை.

இரு படங்களின் கதையும் நோக்கமும் செல்லும் திசையும் வேறு வேறு என்பது இரு படங்களையும் பார்த்தவர்களுக்கு நன்குப் புரியும். விஜய்யின் காதல் வெற்றியடைவதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம், மின்சார கண்ணா. ஒரு குடும்பம் பொய் சொல்லி இன்னொரு வீட்டுக்குள் நுழைவது மட்டுமே பாரசைட் - மின்சார கண்ணா படங்களில் உள்ள ஓற்றுமைகள். மின்சார கண்ணாவில் மட்டுமல்ல, பூவெல்லாம் கேட்டுப்பார், ஜோடி ஆகிய படங்களிலும் காதலுக்காகப் பொய் சொல்லி காதலன்/காதலியின் குடும்ப உறுப்பினர்களைக் கவரும் காட்சிகள் இருந்தன. இதனால் அந்தக் காலக்கட்டத்தில் இப்படங்களின் கதைகளில் உள்ள ஒற்றுமைகள் ரசிகர்களால் தீவிரமாக அலசப்பட்டன.

ஒரு காரணத்துக்காக பொய் சொல்லி ஒரு குடும்பத்தின் ஆதரவைப் பெறுவது, அவர்களின் வீட்டுக்குள் செல்வது என்கிற கதை முடிச்சு மட்டுமே எப்படி பாரசைட் படம் மின்சார கண்ணாவை காப்பியடித்து எடுக்கப்பட்டது என்று கூறமுடியும்? இதுதான் இரு படங்களையும் பார்த்தவர்கள் எழுப்பும் கேள்வி. இதற்காக வழக்கு தொடுக்கும் வரைக்கும் போவது சரியான செயலா என்கிற கேள்வியையும் எழுப்புகிறார்கள். 

தேனப்பன் முடிவு!

பாரசைட் படம் ஆஸ்கர் விருதுகளை வென்றபிறகு பாரசைட் படத்தின் கதை, விஜய் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ல் வெளியான மின்சார கண்ணா படத்தைப் போலவே உள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் சிலர் பதிவுகள் எழுதினார்கள். ஆனால் இந்த விவகாரம் தீவிரமாகும் என அப்போது யாரும் எண்ணவில்லை. பாரசைட் மீது தயாரிப்பாளர் தேனப்பன் வழக்கு தொடர புறக்காரணம் ஒன்று அவரிடம் உள்ளது.

சர்வதேச வழக்கறிஞருடன் இணைந்து இந்த வாரம் வழக்கு தொடரவுள்ளேன். என்னுடைய படத்தின் கதையின் அடிப்படையை வைத்து படமெடுத்துள்ளார்கள். அவர்களுடைய படங்களின் பாதிப்பில் தமிழ்ப் படங்கள் எடுக்கப்பட்டதாக அறிந்தபோது நம் மீது வழக்கு தொடுத்தார்கள். இப்போது அதையே நாமும் செய்யவேண்டியுள்ளது. இரு படங்களுக்கும் ஒற்றுமை உள்ளதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் தேனப்பன். மின்சார கண்ணா படத்தைத் தயாரித்தவர், கே.ஆர்.ஜி. ஆனால் அவர் தற்போது உயிருடன் இல்லை. எனவே மின்சார கண்ணா படத்தின் உரிமம் தற்போது தேனப்பனிடம் உள்ளது. 

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் கருத்து என்ன? இப்படியொரு கதையை 20 வருடங்களுக்கு முன்பே நான் தேர்வு செய்ததை எண்ணி மகிழ்கிறேன். படத்தின் உரிமை தயாரிப்பாளர் தேனப்பனிடம் தான் உள்ளது. அவர் தான் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார்.

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

தயாரிப்பாளரின் இந்த முடிவை தமிழ்ப்படம் இயக்குநர் அமுதன் கிண்டல் செய்துள்ளார். கடந்த வருடம் வெளியான ஜான் விக் 3 படத்தின் ஒரு காட்சி தமிழ்ப்படம் 2 படத்தின் காட்சியைப் போல உள்ளதால் அவர்கள் மீது வழக்குத் தொடர யோசிக்கிறேன் என்று மறைமுகமாக பாரசைட் - மின்சார கண்ணா பட விவகாரத்தைக் கிண்டல் செய்துள்ளார். 

பாரசைட் படம், 1960-ல் வெளியான கொரியப் படமான தி ஹவுஸ்மெயிட் படத்தின் பாதிப்பில் உருவானது என்று அதன் இயக்குநரே கூறியுள்ளார். இந்நிலையில் போங் ஜூன் ஹோ போன்ற பிரபல இயக்குநர், தமிழில் தோல்வியடைந்த மின்சார கண்ணா படத்தினைத் தழுவி படம் எடுக்கவேண்டிய அவசியம் என்ன என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

முடிவு என்ன?

எங்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்கள். இப்போது உங்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்பதே தேனப்பனின் வாதமாக உள்ளது. அதில் நியாயம் இருந்தாலும் பாரசைட் படத்துக்கும் மின்சார கண்ணா படத்துக்கும் உள்ள ஒற்றுமையை விடவும் வேறுபாடுகள் தான் பலருக்கும் அவருடைய முடிவு விநோதமாக உள்ளதாக எண்ணவைக்கிறது. ஆனால் அதையும் நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்று கூறிவிடுகிறார். 

விஜய்யும் கே.எஸ். ரவிக்குமாரும் எத்தனையோ வெற்றிப்படங்களில் பங்கேற்றிருந்தாலும் அந்தப் படங்களுக்கெல்லாம் கிட்டாத ஒரு பெருமை அவர்களுடைய தோல்விப்படமான மின்சார கண்ணாவுக்குக் கிடைத்துள்ளது. ஆஸ்கர் விருதுகளை வென்றாலும் மின்சார கண்ணாவுடன் ஒப்பிடப்பட்டு வழக்கில் போட்டியிடவேண்டிய நிலைமை பாரசைட் படத்துக்கு ஏற்பட்டுள்ளது. படத்தின் சில காட்சிகளில் ஒற்றுமை இருப்பது மட்டுமே புகார் தெரிவிக்கவும் வழக்கு தொடுக்கவும் போதுமானதாக இருக்குமா என்கிற கேள்வி தான் ரசிகர்களிடம் உள்ளது. ஆனால் தேனப்பனின் வாதம், அவர்கள் நம் மீது வழக்கு தொடுக்கும்போது நாம் ஏன் தொடுக்கக் கூடாது. ஒற்றுமை உள்ளதா இல்லையா என்பதை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளட்டும் என்கிறார். இதன்மூலம் வழக்கின் மூலம் கிடைக்கும் எல்லா லாப நஷ்டங்களையும் எதிர்கொள்ள அவர் தயாராக உள்ளார் என்பது தெரிகிறது. நியாயம் வெல்லட்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com