மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்: ஆடை குறித்த தஸ்லிமா குற்றச்சாட்டுக்கு ஏ.ஆர். ரஹ்மான் மகள் பதிலடி!

நாட்டில் பல பிரச்னைகள் உள்ளன. ஆனால் ஒரு பெண் தான் அணியவேண்டிய உடை குறித்துதான்...
மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்: ஆடை குறித்த தஸ்லிமா குற்றச்சாட்டுக்கு ஏ.ஆர். ரஹ்மான் மகள் பதிலடி!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா இஸ்லாமிய முறைப்படி ஆடை அணிவது மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், ரஹ்மானின் மகளின் ஆடை குறித்து ட்விட்டர் பக்கத்தில் விமரிசித்துள்ளார். அவர் கூறியதாவது:

எனக்கு ரஹ்மானின் பாடல்கள் பிடிக்கும். ஆனால் எப்போதெல்லாம் அவர் மகளைக் காண்கிறேனோ, அப்போதெல்லாம் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. பண்பான குடும்பத்திலுள்ள படித்த பெண் கூட சுலபமாக மூளைச்சலவை செய்யப்படுவார் என்பது வருத்தமாக உள்ளது என்று கூறினார். தஸ்லிமாவின் இந்தக் கருத்துக்கு ரஹ்மான் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். இதையடுத்து அவர் மேலும் கூறியதாவது:

இஸ்லாமைப் பின்பற்றவேண்டுமென்றால் அதை முழுமையாகச் செய்யவேண்டும். இசை, பாட்டுப் பாடுவது, நடனம் ஆடுவது போன்றவற்றையும் இஸ்லாம் எதிர்க்கிறது. அதனால் இசையமைப்பதையும் பாடுவதையும் நடனமாடுவதையும் நிறுத்தவும். மனித உருவத்தைப் படம் வரைவதையும் தடை செய்கிறது. எனவே படம் வரைதல், மனிதர்களைப் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றையும் நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

தஸ்லிமாவின் கருத்துக்கு ரஹ்மானின் மகள் கதீஜா, ஃபேஸ்புக்கில் பதில் அளித்துள்ளதாவது:

ஒரு வருடம் கழித்து மீண்டும் இந்த விவகாரம் பேசப்படுகிறது. நாட்டில் பல பிரச்னைகள் உள்ளன. ஆனால் ஒரு பெண் தான் அணியவேண்டிய உடை குறித்துதான் எல்லோரும் அக்கறை செலுத்துகிறார்கள். இது என்னைத் திடுக்கிட வைக்கிறது. இந்த விவகாரம் வெளியே வரும்போது எனக்குள் பெருங்கோபம் பற்றியெறிந்து, நிறைய பேசத் தோன்றுகிறது. என் வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகள் குறித்து வருத்தப்படமாட்டேன். நான் செய்வது குறித்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். என் விருப்பப்படி என்னை ஏற்றுக்கொள்பவர்களுக்கு நன்றி. என் செயல்கள் பேசும், கடவுள் விருப்பப்பட்டால். இதற்கு மேல் பேச விருப்பமில்லை. 

அன்புள்ள தஸ்லிமா, என் உடையைக் கண்டு உங்களுக்கு மூச்சு முட்டியதற்கு வருந்துகிறேன். நல்ல காற்றை சுவாசித்துக்கொள்ளுங்கள். என் முடிவுக்காக எனக்கு மூச்சு திணறவில்லை. பதிலாக, பெருமை கொள்கிறேன். உண்மையான பெண்ணியம் என்றால் என்ன என்று கூகுள் செய்து பாருங்கள். மற்றொரு பெண்ணைத் தரக்குறைவாகப் பேசுவதும் அவருடைய தந்தையை இந்த விஷயத்தில் வம்பிழுக்குவதும் பெண்ணியம் அல்ல. மேலும், உங்கள் கவனத்துக்காக என்னுடைய புகைப்படங்களை அனுப்பியதாக ஞாபகம் இல்லை என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: உங்கள் ஆதரவுக்கு நன்றி. தஸ்லிமாவுக்கு எதிராகப் பேசவேண்டாம். சக மனிதர்களின் தேர்வுகளை அங்கீகரிக்கும் விசால மனம் கொண்ட சமூகமாக மாறுவோம். தன் வாழ்க்கையில் தஸ்லிமா எடுத்த முடிவுகளைக் கொண்டு அவரை மதிப்பிட வேண்டாம். நமது பிரார்த்தனையில் தஸ்லிமாவையும் ஞாபகம் கொள்வோம் என்றார். 

ஏ.ஆர். ரஹ்மானின் மகளின் ஆடை குறித்த சர்ச்சை கடந்த வருடமும் உருவானது.

ஸ்லம்டாக் மில்லினியர் படம் ஆஸ்கர் விருது பெற்று பத்து ஆண்டு நிறைவடைந்ததையொட்டி மும்பை தாராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் அனில் கபூர், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவில் ரஹ்மானின் மகள் கதீஜாவும் கலந்துகொண்டார். அந்த விழாவில் தனது தந்தையைப் புகழ்ந்து பேசினார் கதீஜா.

நிகழ்ச்சியில் கதீஜா, இஸ்லாமிய முறைப்படி, கண்கள் தவிர முகத்தையும் சேர்த்து மறைக்கும் ஆடையான நிகாஃப்-பை அணிந்துகொண்டு வந்தார். இதையடுத்து ரஹ்மானின் மீது விமரிசனங்கள் வந்தன. இதற்கு ஃபேஸ்புக்கில் பதில் அளித்தார் கதீஜா. அவர் கூறியதாவது: என் தந்தையுடனான உரையாடலுக்குக் கிடைத்த வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், அந்த நிகழ்ச்சியில் நான் அணிந்த உடை, என் தந்தையின் வற்புறுத்தலினால் அணிந்ததாகவும் என் தந்தை இரட்டை நிலைப்பாடு கொண்டவர் என்றும் சில விமரிசனங்கள் எழுந்துள்ளன. நான் அணியும் உடைகள், என் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகள் ஆகியவற்றுக்கும் என் பெற்றோருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதைக் கூறிக்கொள்கிறேன். முகத்திரை என்பது எனது முழு சம்மதம் கொண்ட, மரியாதையுடனான தனிப்பட்ட விருப்பம். வாழ்க்கையில் என்ன முடிவுகள் எடுக்கவேண்டும் என்று தெரிந்த ஒரு தெளிவான, பக்குவம் கொண்ட வளர்ந்த பெண் நான். எந்த ஒரு மனிதனுக்கும் என்ன உடை அணிய வேண்டும், என்ன செய்யவேண்டும் என்கிற விருப்பம் உள்ளது. அதைத்தான் நானும் செய்துகொண்டிருக்கிறேன். உண்மையான சூழலைப் புரிந்துகொள்ளாமல் தயவுசெய்து எதையும் முடிவு செய்யவேண்டாம் என்றார். 

தஸ்லிமா
தஸ்லிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com