சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தர்பார் படம் நேற்று வெளியானது.
இந்நிலையில் தர்பார் படத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவைக் கேலி செய்யும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளதாக விமரிசனம் எழுந்தது. இதுகுறித்து லைகா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதைக் குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டன. இருப்பினும் அந்தக் குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதைப் புண்படுத்துவதாகத் தெரிய வந்ததால் அது படத்திலிருந்து நீக்கப்படுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.