
சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி அதிகப் பாராட்டுகளைப் பெற்ற மலையாளப் படம் - கப்பேலா (Kappela). கரோனா ஊரடங்குக்கு முன்பு மார்ச் 6 அன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. மலையாளத்தில் இயக்கிய முகமது முஸ்தபா தான் தெலுங்கிலும் இயக்கவுள்ளார். சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் நாக வம்சி தயாரிக்கிறார். ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஸ்ரீநாத் பாசி வேடத்தில் விஷ்வக் சென் நடிக்கவுள்ளார்.
ஜெஸ்ஸி வேடத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார் அன்னா பென். இதனால் இவருடைய வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அனிகா சுரேந்திரன் (விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்தவர்), கீர்த்தி ஷெட்டி, நித்யா ஷெட்டி என மூன்று நடிகைகள் தற்போது பரிசீலனையில் உள்ளார்கள். இவர்களில் ஒருவர் தான் ஜெஸ்ஸி வேடத்தில் நடிப்பார் என்று தெரிய வருகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுகுறித்த முடிவை உடனடியாக எடுக்க முடியாமல் உள்ளதாகத் தெரிகிறது. ரோஷன் மேத்யூ வேடத்திலும் யார் நடிப்பது என்கிற கேள்விக்கான விடையும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
படக்குழு பற்றிய முழு விவரங்கள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.