
சுசாந்த் சிங் மரணத்துக்கு கரண் ஜோஹரைக் குற்றம் சொல்வதா என இயக்குநர் ராம் கோபால் வர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
திரைத்துறை மீதான ஆா்வத்தில் பொறியியல் படிப்பை பாதியில் கைவிட்ட சுசாந்த் சிங் ராஜ்புத், நடனம் மற்றும் நடிப்புக் கலைகளை முறைப்படி கற்று, திரைத் துறைக்குள் நுழைந்தாா். ஆரம்பத்தில் நடனக் கலைஞராகவும், சிறிய வேடங்களிலும் நடித்து வந்த அவா், 2013-இல் ‘காய் போ சே’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானாா். அதன் பிறகு, ‘சுத் தேசி ரொமான்ஸ்’, ‘ராப்டா’, ‘கேதா்நாத்’, சொன்சிரியா’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவா், கிரிக்கெட் வீரா் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானாா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்த அவா், ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
சுசாந்தின் சிங்கின் மரணத்துக்கு பாலிவுட்டில் நிகழும் அரசியல் தான் காரணம் எனப் பலரும் குற்றம் சாட்டியுள்ளார்கள். வாரிசுகளுக்கும் நண்பர்களுக்கும் சலுகைகளும் வாய்ப்புகளும் வழங்குவதால் வெளி ஆள்களால் பாலிவுட்டில் ஜெயிக்க முடியவில்லை என்று பலரும் சமூகவலைத்தளங்களில் எதிர்வினையாற்றியுள்ளார்கள். பிரபல இயக்குநர் கரண் ஜோஹரையும் பலரும் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
இந்நிலையில் சுசாந்த் சிங் மரணத்துக்கு கரண் ஜோஹரைக் குற்றம் சொல்வதா என இயக்குநர் ராம் கோபால் வர்மா கேள்வி எழுப்பியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போல பாலிவுட்டிலும் தங்கள் வாரிசுகளுக்கு, குடும்பத்தினருக்குச் சலுகைகள், வாய்ப்புகள் அளிக்கிறார்கள். சலுகை அளிக்காக துறை ஏதாவது உள்ளதா? நடந்தவற்றுக்கு கரண் ஜோஹரைக் குறை சொல்வது அபத்தமானது. திரைத்துறை எப்படி இயங்குகிறது என்று தெரியாதவர்கள் தான் இப்படிப் பேசுவார்கள். சுசாந்துடன் கரணுக்குப் பிரச்னை இருந்தாலும் யாருடன் பணிபுரிய வேண்டும் என்பது கரணின் விருப்பம்.
12 வருடம் புகழுடன் இருந்து, வருமானம் பெற்ற பிறகும் தன்னை வெளி ஆள் போல பாலிவுட்டில் எண்ணுவதாக சுசாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டால், பிறகு இவர் அளவுக்கு உயரத்தைப் பார்க்காத நூறு நடிகர்களின் தற்கொலைகளை நியாயப்படுத்த வேண்டியிருக்கும். கையில் உள்ளதை வைத்து திருப்தியடையாவிட்டால் எப்போதும் எவ்வளவு இருந்தாலும் திருப்தி கிடைக்காது.
அமிதாப் பச்சன் போன்றவர்கள் வெளியிலிருந்து வந்துதான் பாலிவுட்டில் ஜெயித்தார்கள். திரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதால் மட்டும் கரண் ஜோஹர் ஜெயிக்கவில்லை. அவர் படத்தைப் பல கோடி பேர் பார்த்துள்ளார்கள். சுசாந்தை எவ்வளவு பேர் வெளியேற்ற நினைத்திருந்தாலும் அவருடன் இணைந்து பணியாற்ற பலர் காத்திருந்தார்கள். அவர்களுடன் பணிபுரிய வேண்டாம் என சுசாந்த் முடிவெடுத்தது போல மற்றவர்களுக்கும் அதுபோல உரிமை உண்டு.
திரைத்துறையில் சுசாந்த் நீடித்திருந்தால் 10, 20 வருடங்கள் கழித்து அவரும் திரைத்துறையில் ஒருவராக இருந்து, தனது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தியிருப்பார். அப்போது வெளியில் இருந்து ஒருவர் சுசாந்தைக் குற்றம் சாட்டியிருப்பார். எவ்வளவு பெரிய திரைத்துறைக் குடும்பமாக இருந்தாலும் ரசிகர்களை அவர்களால் தங்கள் வசப்படுத்த முடியாது. யாரை ரசிக்க வேண்டும், ரசிக்கக் கூடாது என்பதை ரசிகர்கள் தான் முடிவு செய்வார்கள். கரண் ஜோஹர் பிரபலமானதற்குக் காரணம் ரசிகர்கள் தான். அவராகத் தன்னை உருவாக்கிக்கொள்ளவில்லை. கரண் ஜோஹர் மீதான பொறாமை காரணமாக சுசாந்தின் மரணத்தைப் பயன்படுத்தி அவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...