
நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் 39-வது படம் குறித்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வெளியானது. இதன்படி நடிகர் சூர்யா 6-வது முறையாக இயக்குநர் ஹரியுடன் இணைகிறார். இந்தப் படத்துக்கு 'அருவா' என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஹரிக்கு இது 16-வது படமாகும்.
இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும் இந்தப் படத்தின் மூலம் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஹரியுடன் இசையமைப்பாளர் டி. இமான் முதன்முறையாக இணைகிறார்.
இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற்று வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து அருவா மற்றும் சூர்யா39 எனும் ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகின்றன.
முன்னதாக, நடிகர் சூர்யா தன்னுடைய 39-வது படத்துக்காக இயக்குநர் சிவாவுடன் இணைந்து பணியாற்றவிருந்தது. ஆனால், சிவா ரஜினியை வைத்து படம் இயக்கி வருவதால் இந்தக் கூட்டணியின் படம் தள்ளிப்போனது. அதேசமயம், இயக்குநர் வெற்றி மாறனுடன் இணைந்து வாடிவாசல் என்ற படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.