நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

ரஜினி பெயரில் பரவிய போலி அறிக்கை - முழு விவரம்

உடல்நிலை குறித்து என் பெயரில் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

உடல்நிலை குறித்து என் பெயரில் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், அந்த அறிக்கையில் இருக்கும் எனது உடல் நிலை குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மையே என்றும் அவர் சுட்டுரைப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக, ரஜினி பெயரில் பரவிய போலி அறிக்கையில்..

"என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்குக் கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் - அரசியல் மாற்றத்திற்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்.

இந்தக் கொரோனா பிரச்னையினால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை.

2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016-ம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்குச் சிறுநீரகத்தில் தீவிரமாக பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்.

கரோனா தொற்று எப்போது முடியும் எனத் தெரியாத நிலையில் எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு மருத்துவர்கள், "கரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது, வந்தாலும் அந்தத் தடுப்பூசியை உங்களுக்குச் செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக் கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும். இப்போது உங்களுக்கு வயது எழுபது. உங்களுக்கு சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களை விட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக் கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல் நலத்தையும் நிச்சயம் கடுமையாகப் பாதிக்கும். ஆகையால் இந்தக் கரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்" என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.

எனக்கு என் உயிர் பற்றிய கவலை இல்லை. என்னை நம்பி வருவோரின் நலன் குறித்துதான் கவலை. நான் துவங்குவதோ புதுக் கட்சி. மக்களை நேரில் சந்திக்காமல், மாநாடுகள் நடத்தாமல், பொதுக்கூட்டங்கள் கூட்டாமல் வெறும் சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மூலமாக மட்டும் பிரசாரம் செய்தால், நான் எதிர்பார்க்கும் அரசியல் எழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கி அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. மருத்துவர்களின் ஆலோசனையை மீறி கட்சி ஆரம்பித்து, இடையில் என் உடல் நலம் பாதிப்படைந்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும்.

இதை இப்போதே சொல்லக் காரணம், என்னை ஆதரிப்போரின் மத்தியில் நான் அரசியலுக்கு வருவேன் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழலில், இந்தக் கரோனா பிரச்னை தொடரும் நிலையில், கடைசி நேரத்தில் இந்தக் காரணங்களை காட்டி ஒருவேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும். நான் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதை எதிர்வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான முடிவை டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும். இது தீர்க்கமாக யோசித்து, தீர ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு.

எனவே அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, என் உடல் நலத்தில் அக்கறையுள்ள என்னை வாழ வைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய ரசிகர்களும், மக்களும் என்னை என்ன முடிவு எடுக்கச் சொன்னாலும் அதனை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

மக்கள் தீர்ப்பே. மகேசன் தீர்ப்பு.
வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு!! ஜெய்ஹிந்த்!!!
அன்புடன்
ரஜினிகாந்த்" என்று வெளியாகியிருந்தது.

ஆனால், இந்தக் கடிதம் என்னுடையது அல்ல என்றும், கடிதத்தில் எனது உடல்நிலைப் பற்றி கூறப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையானதே என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com