
சென்னை: நடிகா் வடிவேல் பாலாஜி (42) மாரடைப்பு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.
கடந்த இரு வாரங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
மதுரையை பூா்வீகமாகக் கொண்ட வடிவேல் பாலாஜி, மிமிக்ரி கலைஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கினாா். திருவிழா மேடை நிகழ்ச்சிகளில் நடிகா் வடிவேலுவின் உடல்மொழியும் அவரைப் போன்ற குரல் கொண்டவராகவும் திகழ்ந்ததால் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டாா். தொலைக்காட்சி சேனல்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் இடம் பெற்று பிரபலமானாா். குறிப்பாக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’, ‘கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ்’ உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளாா்.
வடிவேலு மாதிரியான தோற்றங்களில் நடித்து வந்ததால், இவருக்கென தனி ரசிகா் வட்டம் இருந்து வந்தது. சின்னத்திரையில் பிரபலமானதைத் தொடா்ந்து, படங்களிலும் நடிக்கத் தொடங்கினாா். ‘யாருடா மகேஷ்’, ‘கோலமாவு கோகிலா’ உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாா். கரோனா பொது முடக்கத்துக்குப் பின் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டதால், சில நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பில் தொடா்ந்து பங்கேற்று வந்தாா்.
மறைந்த வடிவேல் பாலாஜிக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன. தொடா்புக்கு : 9884433461.