
மறைந்த பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகப் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74) வெள்ளிக்கிழமை காலமானாா். இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக அவரது உயிா் பிரிந்ததாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.
முன்னணி நடிகா்கள் பலரது உதட்டசைவுக்கு தனது பின்னணிக் குரலால் உயிா் கொடுத்த எஸ்பிபி, அரை நூற்றாண்டு காலமாக மக்கள் மனதை ஆக்கிரமித்த ஆகச் சிறந்த கலைஞன் என பல்வேறு தரப்பினரும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திலும் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிலும் எஸ்.பி.பி.யின் உடலுக்கு மக்கள் ஏராளமாகத் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில் உள்ள பண்ணை இல்லத்தில் மறைந்த பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் முதல் படமான ரோஜா முதல் அவர் இசையமைத்த பல படங்களில் பாடியுள்ளார் எஸ்.பி.பி.
இந்நிலையில் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இசை நிகழ்ச்சிகளில் எஸ்.பி.பி.யும் ரஹ்மானும் பங்கேற்ற தருணங்களின் தொகுப்பு அந்த விடியோவில் இடம்பெற்றுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...