8 வருடத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம்: விஜய் ரசிகர்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள்
நடிகர் விஜய்யின் தலைவா திரைப்படம் வெளியாகி 8 வருடங்கள் நிறைவடைந்ததை ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் 'தலைவா'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார். விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடிக்க, நடிகர் சத்யாராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
விஜய்யுடன் இணைந்து சந்தானம் பங்கேற்ற நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஜி.வி.பிரகாஷின் இசையில் அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தன. இத்தனை சிறப்புகள் இருந்தும் இந்தப் படம் வெளியாகும்போது பல்வேறு சிக்கல்களை சந்தித்தது.
இந்தப் படத்தில் 'தலைவா 'என்ற தலைப்புடன் டைம் டு லீட் என்ற ஆங்கில வார்த்தைகள் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்தப் படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டன.
இதனையடுத்து நடிகர் விஜய் உருக்கமாக பேசிய விடியோ வெளியாகி ரசிகர்களை கலங்கச் செய்தது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் படம் முன்பே வெளியாக, தமிழக ரசிகர்கள் அங்கு சென்று படம் பார்த்தனர்.
பின்னர் ஒரு வழியாக டைம் டு லீட் என்ற வாசகம் நீக்கப்பட்டு, திரையரங்குகளில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் 'தலைவா' திரைப்படம் திரையிடப்பட்டது.
இவ்வளவு சிக்கல்களுக்கு நடுவில் இந்தப் படம் வெளியானதால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் இந்தப் படம் வெளியான தேதி விஜய் ரசிகர்கள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. எனவே தலைவா என ஹேஷ்டேக் உருவாக்கி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.