நா. முத்துக்குமார் பாடல்களின் எடுத்துக்காட்டுகள் ஏன் சிறப்பானவை?

நா.முத்துக்குமாரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் பாடல்களில் பயன்படுத்தி வந்த உதாரணங்கள் குறித்து சிறப்புப் பதிவு
நா. முத்துக்குமார் பாடல்களின் எடுத்துக்காட்டுகள் ஏன் சிறப்பானவை?

நா.முத்துக்குமாரின் சிறப்பு பற்றி கேட்டால், அனைவரும் சொல்வது அவரது எளிமையான வரிகள். ஆனால் அவரது பாடல்களில் கூறும் உதாரணங்களும் எளிமையானது தான். திரைப் பாடல்களில் அவர் கூறும் எளிமையான உதாரணங்கள் பற்றிய பதிவு. 

உதாரணமாக, 'சத்தம் போடாதே' படத்தில் இடம்பெற்ற 'பேசுகிறேன்' பாடலில், 'முற்றுப்புள்ளி அருகில் நீயும் மீண்டும் சிறு புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே
' என்று எழுதியிருப்பார்.

ஒரு வாக்கியம், முடிந்து விட்டது என்றால், முற்றுப்புள்ளி வைப்போம், அந்த வாக்கியம் தொடர்கிறது என்பதைக் குறிக்க முப்புள்ளி வைப்போம். எண்ணம் போல் வாழ்க்கை என்பதற்கு அவர் கொடுக்கும் உதாரணம் தான் மேலே குறிப்பிட்ட வரிகள். அதற்கு அவர் கொடுத்திருக்கும் முற்றுப்புள்ளி, முப்புள்ளி உதாரணத்தை எழுதிப் பழக்கமுள்ள எல்லோராலும் அர்த்தம் செய்துகொள்ள முடியும். அந்த எளிமை தான் நா.முத்துக்குமார். 

அதே முப்புள்ளியை தனது மற்றொரு பாடலில் வேறு விதத்தில் பயன்படுத்தினார். 'ஒருநாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப் போகாது' என்ற பாடல் தான் இன்றுவரை அனைவரைின் காயங்களுக்கும் மருந்திட்டு வருகிறது. அந்தப் பாடலில் 'அந்தக் கடவுளைக் கண்டால்...' என்று வரியில் முப்புள்ளியை மிக அழகாக கையாண்டிருப்பார். அதற்கு காரணம், கடவுளைக் காண்பது, சாத்தியமில்லாதது. அப்படிக் கண்டால் என்ன செய்வோம் என்பதை நம் முடிவுக்கு விட்டுவிடுகிறார். 

தமிழ் சினிமாவில் எல்லா சூழ்நிலைகளுக்கும் மிகச் சரியாக பொருந்தக் கூடிய பாடல் ஒன்றை முத்துக்குமார் எழுதியிருப்பார். உதாரணமாக சொல்ல
வேண்டும் என்றால் 'வெயில்' படத்தில் இடம் பெற்ற 'வெயிலோடு விளையாடி' பாடலைச் சொல்லலாம்.

ஒட்டுமொத்த விருதுநகர் மாவட்ட வாழ்வியலையும் ஒரே பாடலில் சொல்லியிருப்பார்.  குறிப்பாக 'எங்க ஊரு மேகம் எல்லாம் எப்பவாச்சும் மழ பெய்யும்' என விருதுநகரில் பெய்யும் மழையை உதாரணமாகக் கொண்டு வெயிலின் தாக்கத்தை உணர்த்துகிறார். காஞ்சிபுரத்தில் பிறந்து வளர்ந்த ஒருவரால் எப்படி விருதுநகரைப் புரிந்துகொள்ள முடிந்தது?. அவர் தான் முத்துக்குமார்.

காதல், நட்பு, உறவுகளின் மேன்மை என எல்லா தலைப்புகளிலும் நா.முத்துக்குமாரின் சிறப்பான பாடல் ஒன்றிருக்கும். தந்தை பற்றிய பாடலான 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்' பாடலில், 'வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம், தந்தை அவனின் பாசத்தை எங்கே
காண்கிறோம். காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்
' என்று எழுதியிருப்பார். இதை விட தந்தை - மகனுக்கிடையேயான உறவுச் சிக்கலை
யாராலும் தத்ரூபமாக பதிவு செய்திட முடியாது.

கதாநாயகன் தன் காதலியை விவரித்து பாடுவதாக இயக்குநர்கள் அமைக்கும் சூழ்நிலைக்கு, அவள் பேரழகு என்று நாயகன் வர்ணிப்பதாக கவிஞர்கள் எழுதி வந்தனர். ஆனால், 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' என்று எழுதும் தைரியம் நா.முத்துக்குமார் மட்டுமே இருந்தது. 

'காதல் கொண்டேன்' பட, தேவதையைக் கண்டேன் பாடலில், ''கல்லறை மீது பூக்கும் பூக்கள் கூந்தலைத் தான் போய் சேராதோ' என்ற ஒருவனின்
ஏக்கத்தைப் பதிவு செய்யும் அவர், அதே உதாரணத்தைக் கொண்டு 'உனக்கென இருப்பேன்' என்ற பாடலில், ''கல்லறை மீது தான் பூக்கும் பூக்கள் என்று தான் வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா?'' என்று நம்பிக்கை அளிக்கிறார். 

முரணான இருவர் காதல் வாயப்படும்போது, அதனை 'ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்' என்பார். இதைவிட
சிறப்பான உதாரணத்தை அந்த சூழ்நிலைக்கு யாராலும் சொல்லிவிட முடியுமா என்ன? 

அதேபோல 'டும் டும் டும்' படத்தில் இடம் பெற்ற 'ரகசியமாய்' பாடலில் காதலைக் கையாள்வது எவ்வளவு கடினமானது என்பதை உணர்த்த, 'இலை 
வடிவில் இதயம் இருக்கும், மலை வடிவில் அதுவும் கணக்கும்
' என எழுதியிருப்பார். 

'ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள், மெழுகினிலே அதைப் படைத்துவிட்டான், பெண்கள் வந்து பேசிடும்பொழுது மெதுமெதுவாய் அதை உருக விட்டான்' என்று காதல் வயப்பட்டிருக்கும் ஆண்கள் மனதை மெழுகுடன் ஒப்பிட்டிருப்பார். 

'புதுப்பேட்டை' படத்தில் வாய்ப்புகள் தானாக அமையாது, நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்த, அவர் கூறும் உதாரணம்,
''காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும், காத்திருக்காதே கல்லடி கிடைக்கும்'' என்பது.

'கற்றது தமிழ்' படத்தில் குடும்பத்தை இழந்து நிர்கதியாய் நிற்கும் சிறுவனை, அவனது தமிழ் ஆசிரியர் தேற்றி, பராமரிப்பார். அப்போது வரும் 'பற பற 
பட்டாம்பூச்சி' பாடலில், அந்த சூழ்நிலையை விளக்க, 'தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு இலை படகு ஆனதே' என்று எழுதியிருப்பார்.

நட்பின் சிறப்பைச் சொல்ல, 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் ''நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும்டா'' என உதாரணம் கூறுவார். 

மனைவியைப் பிரிந்து தவிப்பவனின் மன நிலையைப் பிரதிபலிக்கும் விதமாக, ''மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்துக் கலைகிறாய்'' என எழுதியிருப்பார். 

'தங்க மீன்கள்' படத்தில் கையறுநிலையில் இருக்கும் ஒரு மனிதனை, ''கலைந்திடும் கோலம் என்ற போதிலும், அதிகாலையில் வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்'' என்ற வரியால் தேற்றுவார். 

இன்றுடன் நா. முத்துக்குமார் மறைந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. நா. முத்துக்குமாருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நிலவும் ஒருவித வெறுமையே, அவரது சிறப்பை இன்னும் அதிகமாக நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது.

அவரது இன்மை எவ்வளவு தூரம் நம்மை பாதித்திருக்கிறது என்பதை அவரது எடுத்துக்காட்டுகளின் வழியே தெரிவிக்க வேண்டுமென்றால், அவர் இந்த உலகுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். நாம் அவரை முப்புள்ளி வைத்துத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். முத்துக்குமார் என்றென்றும் நம்முடன் இருப்பார், அவரது பாடல்களின் வழி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com