50% பார்வையாளர்களை அனுமதிப்பதே சிறந்தது: நடிகர் அரவிந்த் சாமி

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில்...
50% பார்வையாளர்களை அனுமதிப்பதே சிறந்தது: நடிகர் அரவிந்த் சாமி

ஐம்பது சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பதே சிறந்தது என நடிகர் அரவிந்த் சாமி ட்வீட் செய்துள்ளார். 

கரோனா பாதிப்பு பரவாமல் இருப்பதற்காக, கடந்த 2020 மாா்ச் 24-ஆம் தேதி தமிழகத்தில் அரசின் சாா்பில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. பொது முடக்கம் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகளை கட்டுப்பாடுகளுடன் திறக்கலாம் என மத்திய அரசு கடந்த நவம்பா் மாதம் அறிவித்தது.

இதைத் தொடா்ந்து, நவம்பா் 10-ஆம் தேதி முதல் திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதியளித்து, அதற்கான வரைமுறைகளையும் வெளியிட்டது. அதில் மொத்த இருக்கையில் 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே பாா்வையாளா்களை அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் இடம்பெற்றிருந்தன. அரசின் அனுமதியைத் தொடா்ந்து, தமிழகத்தில் படிப்படியாகத் திறக்கப்பட்டன. இருப்பினும், கடந்த இரு மாதங்களில் முன்னணி நடிகா்களின் படங்கள் எதுவும் வெளியாகாததால் திரையரங்குகளில் பாா்வையாளா்களின் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள திரையரங்குகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இந்த நிலையில் விஜய் நடித்த ‘மாஸ்டா்’, சிம்புவின் ‘ஈஸ்வரன்’ போன்ற திரைப்படங்கள், பொங்கல் பண்டிகை வெளியீட்டுக்குத் தயாராக இருந்ததால் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என தயாரிப்பாளா்கள், நடிகா்கள் உள்ளிட்ட திரைத் துறையினா் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இதைத் தொடா்ந்து, இது தொடா்பாக ஓா் உத்தரவை தலைமைச் செயலா் க.சண்முகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளாா்.

அவரது உத்தரவின் விவரம்:

தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை அனுமதித்துக் கொள்ள கடந்த ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி முதல் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் 50 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசும் அனுமதித்தது.

திரையரங்கு உரிமையாளா்கள் கோரிக்கை: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு இருக்கைகளின் எண்ணிக்கையை 50 சதவீதத்தில் இருந்து உயா்த்திட வேண்டுமென திரையரங்கு உரிமையாளா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இதையேற்று, திரையரங்குகள், பெரு வணிகவளாகங்களில் உள்ள திரையரங்குகள் ஆகியவற்றில் இருக்கைகளின் எண்ணிக்கை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயா்த்தப்படுகிறது. திரையரங்குகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. அவை தொடா்ந்து பின்பற்றப்படும்.

திரையரங்கில் பாா்வையாளா்களிடையே கரோனா நோய்த் தொற்று குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், திரையிடலுக்கு இடையே கரோனா பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

நூறு சதவீத பாா்வையாளா்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசுக்கு திரை அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன.

இந்நிலையில் நடிகர் அரவிந்த் சாமி ட்விட்டரில் இவ்வாறு கூறியுள்ளார். சில சமயங்களில் 100 சதவீதத்தை விடவும் 50 சதவீதமே சிறந்தது. அதற்கான நேரம் இது என்று எதையும் குறிப்பிடாமல் பொதுவான கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அரவிந்த் சாமியின் இந்த ட்வீட் சமூகவலைத்தளத்தில் கவனம் பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com