

தன்னுடைய பழைய சமூகவலைத்தளப் பதிவுகள் தலைவர்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என மேதகு இயக்குநர் கிட்டு கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரான பிரபாகரனின் வரலாற்றுப் படமாக உருவாகியுள்ள மேதகு, சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் கிட்டுவின் பழைய சமூகவலைத்தளப் பதிவுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. தமிழக அரசியல் தலைவர்கள், நடிகை நயன்தாரா ஆகியோரைப் பற்றிய கிட்டுவின் பழைய பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இதனால் சர்ச்சைகளுக்கு ஆளாகியிருக்கும் இயக்குநர் கிட்டு, வருத்தம் தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
வணக்கம், நான் உங்கள் கிட்டு. நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய நமது தேசியத் தலைவரின் ஆரம்பக்கட்ட வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மேதகு’ உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு, என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு நாள்களாகச் சமூக வலைதளங்களில் என்மீது வைக்கப்படும் அந்த விமர்சனங்களுக்கு இப்போது பதில் சொல்கிறேன்.
கடந்த இரு நாள்களாக, 2019-ம் ஆண்டுக் காலகட்டங்களில் கட்சித் தலைவர்கள் ஏதாவது சொன்னால், அதற்குப் பதிலடி கொடுப்பது போல சில பதிவுகளைப் போடுவேன். அது நையாண்டியாகவும் இருக்கலாம், கேலியாகவும் இருக்கலாம். ஆனால், 2019-ல் எழுதிய பதிவுகளை இப்போது எடுத்து வந்து, அதில் நிறைய மாற்றங்களைச் செய்து வெளியிட்டு வருகிறார்கள்.
‘மேதகு’ திரைப்படம் மக்களிடம் போய் சேரக்கூடாது என்கிற நோக்கத்துடன் பல குழுக்கள் வேலை செய்கிறார்கள் என்பதை இந்த இரு நாள்களாக நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது. படத்தை எல்லா கட்சியினரும் பார்க்கவேண்டும் என்பதற்காக எல்லாக் கட்சி சார்புடையவர்களையும் அழைத்திருந்தோம். அனைவரும் வந்திருந்தார்கள். நம் அனைவரையும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் சக்தியாக தேசியத்தலைவரை அப்போதுதான் பார்த்தேன். தலைவர் எல்லாக் கட்சியினருக்கும் அப்பாற்பட்டவர் என்பது புரிந்தது.
’மேதகு’ பட டைட்டில் கார்டில் கூட ’நன்றி மறப்பது நன்றன்று’ என்கிற குறளைத்தான் போட்டேன். படம் வெளிவர எனக்கு அனைத்துக் கட்சியினரும் உதவியாக இருந்துள்ளார்கள். இது எனக்காக அல்ல. தலைவரை வெளியில் கொண்டுவரவேண்டும் என்பதற்காக எல்லோருமே உழைத்திருக்கிறார்கள். அதனால், கடந்த 2019-ம் ஆண்டில் நான் இட்ட பதிவுகள் தலைவர்கள் மனதைப் புண்படுத்துமானால் உறுதியாக நான் என்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்கிறேன். அதனால், யாரும் தொடர வேண்டாம். ’மேதகு’ படத்தை மீண்டும் மீண்டும் ஆதரிக்க வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.