பொறாமை கூடிக்கொண்டே போகிறது: மலையாளப் படங்கள் பற்றி இயக்குநர் வசந்தபாலன்

திரைப்படத்தைப் பார்க்கும்போது ஏற்படும் பொறாமை அளவு தினந்தினம் கூடிக்கொண்டே போகிறது...
நாயாட்டு படத்தில் ஒரு காட்சி
நாயாட்டு படத்தில் ஒரு காட்சி

மலையாளத் திரைப்படங்களைப் பார்க்கும்போது ஏற்படும் பொறாமையின் அளவு கூடிக்கொண்டே போகிறது எனப் பிரபல இயக்குநர் வசந்தபாலன் கூறியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ், அபர்னதி நடிப்பில் ஜெயில் என்கிற படத்தை இயக்கியுள்ளார் வசந்தபாலன். ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் ஆகிய படங்களை அவர் இயக்கியுள்ளார். ஜெயில் படம் விரைவில் வெளிவரவுள்ளது. தனது விருதுநகர் பள்ளி நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை வசந்தபாலன் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் படத்தை இயக்குகிறார்.

சமீபத்தில் கரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருந்த வசந்தபாலன், அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் ஃபேஸ்புக்கில் இரு மலையாளப் படங்கள் பற்றி அவர் எழுதியதாவது:

சமீபத்தில் இணையத்தில் மிகவும் சரச்சைக்குரியதான நாயாட்டு, பிரியாணி ஆகிய இரண்டு மலையாள மொழித் திரைப்படங்களையும் பார்த்தேன். இந்த இரண்டு படங்களையும் அந்த மண்ணின், அந்த மொழியின், அந்த சூழ்நிலையின் அவ்விடத்தின் அரசியல் பின்புலத்தைக் கருத்தில் வைத்து புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு திரைப்படத்திலும் நடித்துள்ள நடிகர்கள் மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார்கள். தொழில்நுட்பமும் மிக நேர்த்தியாக உள்ளது.

பிரியாணி திரைப்படத்தில் நடித்துள்ள கதாநாயகி கனி (Kani Kusruti) விருதுகளுக்கு மீறிய தகுதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எப்போதும் வெளிப்படும் காவிய சோகம் பொருந்திய முகம். தன் குழந்தை கருவில் கலையும் போதும், பாலியல் வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் போதும் 
ஆண் சமூகத்தின் மீது மலத்தை வாறியிறைப்பது போல ஒரு உணர்ச்சியை கொணர்ந்திருக்கிறார்.

மிக துணிச்சலாக பல காட்சிகளில் நடிக்கும்போது எவ்வித விரும்பும் வெறுப்புமின்றி திரைப்படம் என்கிற மீடியத்தை முழுவதுமாக புரிந்துகொண்ட நடிகையாக தன்னை முன் நிறுத்தியுள்ளார். மனமார்ந்த வாழ்த்துகள் கனி. 

நாயாட்டு திரைப்படம் துவங்கி முடியும் தருவாயில் வரை மிக விறுவிறுப்பான திரைப்படம். காவல்நிலையம் தான் கதைக்களம். அதற்குள் வருகிற மனிதர்கள், அதற்குள் வசிக்கிற மனிதர்கள், அதிலிருந்து வெளியேறுகிற மனிதர்கள், அதில் சிக்கி பலியாகிற மனிதர்கள்... கதை பண்ண இது போதுமே. அவரவர் பக்கம் நியாயம் பேசுவது பொது நியாயமா என்கிற கேள்வியோடு தான் இணையத்தில் சர்ச்சை வெடித்தது. அதைப் படம் பார்த்த பிறகு நீங்களே முடிவு செய்யுங்கள். மிக சிறிய பட்ஜெட்டில் அழகாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். குஞ்சாகோ போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா ஆகிய மூவரும் பிரமாதமான நடிப்பை வழங்கியுள்ளார்கள். ஆனால் நான் ரசிகனாக மாறியது ஜோஜு ஜார்ஜ் நடிப்பிற்குத்தான். ஆஹா.... எங்களூர் வயிறும் தொப்பையுமான ஒரு காவல் அதிகாரியை நினைவுபடுத்தும் அளவிற்கு அத்தனை எதார்த்தம். இன்னொரு துண்டு கதாபாத்திரம், படத்தின் வில்லன் வெடவெடன்னு காவல் நிலையத்தை பார்வையால் கலங்கடிக்கிறான்.

இரு திரைப்படங்களின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். மலையாள திரைப்படத்தைப் பார்க்கும்போது ஏற்படும் பொறாமை அளவு தினந்தினம் கூடிக்கொண்டே போகிறது என்று எழுதியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com