கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் படம்: இயக்குநர் விலகல்

கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்குவதிலிருந்து...
கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் படம்: இயக்குநர் விலகல்

கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்குவதிலிருந்து ராகுல் தொலாகியா விலகியுள்ளார். 

இந்திய கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, சர்வதேச அளவில் முன்னணி அணிகளில் ஒன்றாக இருப்பதற்கு முக்கியக் காரணமாக இருப்பவர், மூத்த வீராங்கனை மிதாலி ராஜ். தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ராஜ், ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஹைதராபாத்துக்கு இடம்மாறியது.

ஒரு வீராங்கனையாகவும் கேப்டனாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ். 1999-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய மிதாலி ராஜ் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையைச் சமீபத்தில் நிகழ்த்தினார். 2017-ல் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்தார். இதுவரை 11 டெஸ்டுகளிலும் 214 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.

2005, 2017 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய பெருமையும் மிதாலி ராஜுக்கு உண்டு.

சர்வதேச கிரிக்கெட்டில் தனது 22-வது வருடத்தை வரும் ஜூன் 26 அன்று பூர்த்தி செய்கிறார் மிதாலி. இவ்வளவு காலம் வேறு எந்த வீராங்கனையும் சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்ததில்லை என்பதே அவருடைய பெருமையை நன்கு உணர்த்தும். 1999, ஜூன் 26 அன்று, 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் மிதாலி ராஜ். ஜெட் வேகத்தில் கிட்டதட்ட 22 வருடங்கள் ஓடிவிட்டன. 

சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எடுத்த 2-வது வீராங்கனை மற்றும் முதல் இந்திய வீராங்கனை ஆகிய பெருமைகளை அவர் பெற்றுள்ளார்.

2019 டிசம்பர் 3, மிதாலி ராஜின் பிறந்த நாளன்று அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. 

மிதாலி ராஜ் வேடத்தில் டாப்சி நடிக்கும் படத்தை ராகுல் தொலாகியா இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. சபாஷ் மித்து என இப்படத்துக்குப் பெயரிடப்பட்டது. தயாரிப்பு - வியாகாம்19 ஸ்டூடியோஸ். 

இந்நிலையில் சபாஷ் மித்து படத்தை இயக்குவதிலிருந்து ராகுல் தொலாகியா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஸ்ரீஜித் முகர்ஜி இப்படத்தை இயக்கவுள்ளார். 

கரோனா சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாக ராகுல் தொலாகியா கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com