பண்டாரத்தி புராணம், மஞ்சனத்தி புராணமாக மாற்றம்: கர்ணன் பட இயக்குநர் மாரி செல்வராஜ்

தேவதைகள் எந்தப் பெயரில் அழைக்கபட்டாலென்ன..
பண்டாரத்தி புராணம், மஞ்சனத்தி புராணமாக மாற்றம்: கர்ணன் பட இயக்குநர் மாரி செல்வராஜ்
Updated on
2 min read

கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்கிற பாடல் வரிகள், மஞ்சனத்தி புராணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன். இந்தப் படமும் தனது முதல் படம் போல முக்கியமான பிரச்னையைப் பேசும் என்கிறார் மாரி செல்வராஜ். இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்‌ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜுன், ஃபைனல்ஸ், ஸ்டாண்ட் அப் படங்களில் நடித்த ரஜிஷா நடித்துள்ள முதல் தமிழ்ப் படம் இது. கடந்த டிசம்பர் மாதம் கர்ணன் படப்பிடிப்பு நிறைவுபெற்றது.

சந்தோஷ் நாராயணனின் பாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்த நிலையில் கர்ணன் படம் திரையரங்குகளில் ஏப்ரல் 9 அன்று வெளியாகவுள்ளது. 

கர்ணன் படத்தில் இடம் பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் பாடலை நீக்கவும், நீக்கும்வரை படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாடல், குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிப்பிடும் பெயரைப் பயன்படுத்தியுள்ளதால் படத்திலிருந்து அப்பாடலை நீக்கவேண்டும், அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக நடிகர் தனுஷ், இயக்குநர் மாரி செல்வராஜ், பாடலாசிரியர், பாடலைப் பாடிய தேவா, தயாரிப்பாளர் தாணு, திரைப்படத் தணிக்கை வாரிய மண்டல அலுவலர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பண்டாரத்தி புராணம் என்கிற பாடல் வரிகள், மஞ்சனத்தி புராணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் அறிக்கை வெளியிட்டுள்ளதாவது:

கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சிப் படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான்.

சொந்த அத்தையாக, அக்காவாக, ஆச்சியாக, பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிப்படுத்தினேன். ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

தேவதைகள் எந்தப் பெயரில் அழைக்கபட்டாலென்ன... பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தைப் பாடுவான், கர்ணன் ஆடுவான் . ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும்... காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com