பிரான்ஸில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்

கரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக பிரான்ஸில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்யவுள்ளார் பாலிவுட் நடிகர் சோனு சூட்.
பிரான்ஸில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்

கரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக பிரான்ஸில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்யவுள்ளார் பாலிவுட் நடிகர் சோனு சூட்.

கரோனா ஊரடங்கால் அவதிப்பட்ட பலருக்கும் உதவிகள் செய்து இந்திய அளவில் புகழ் பெற்றவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஊரடங்கு காலத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு சென்று சேர்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தந்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் சிலரை விமானம் மூலமாகவும் சொந்த ஊருக்கு அனுப்பி வந்தார். இதுபோன்ற உதவிகளினால் திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை சோனு சூட் பெற்றார். இந்தியாவில் நிலவும் கரோனா 2-வது அலையிலும் பலருக்கும் உதவி செய்து வருகிறார் சோனு சூட்.

தில்லி உள்பட நாட்டின் பல பகுதிகளில் பெரிய மருத்துவமனைகளில்கூட ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருக்கும் மக்களில் சிலருக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இந்தச் சிக்கலைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் பிரான்ஸில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்து, கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிரா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவவுள்ளார் பாலிவுட் நடிகர் சோனு சூட். இதுபற்றி அவர் கூறியதாவது:

ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் பலர் சிரமப்படுவதைப் பார்த்துள்ளோம். ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்காக உற்பத்தி ஆலைகளைக் கொண்டு வருகிறோம். இந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலை மருத்துவமனைக்கு மட்டும் உதவும் என்றில்லை, ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்பவும் முடியும். இதனால் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் பெரிய பிரச்னை தீர்க்கப்படும். நேரம் தான் சவாலாக உள்ளது. அனைத்தும் விரைவில் வரவேண்டும். இனிமேலும் நாம் உயிர்களை இழக்கக் கூடாது என்றார். இதன் முதற்கட்டமாக அடுத்த 10 நாள்களில் ஒரு ஆக்சிஜன் ஆலை இந்தியாவுக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com