
தி ஃபேமிலி மேன் இணையத் தொடருக்குப் புதிய தோற்றத்தை நடிகை சமந்தா அளித்துள்ளார் என இயக்குநர்கள் ராஜ் & டிகே கூறியுள்ளார்கள்.
2019 செப்டம்பரில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான தி ஃபேமிலி மேன் இணையத் தொடர் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், பிரியா மணி நடித்த இத்தொடரை ராஜ் & டி.கே. இயக்கியிருந்தார்கள்.
தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் 2-வது பாகம் உருவாகியுள்ளது. இதில் இலங்கைத் தமிழராக நடிகை சமந்தா நடித்துள்ளார். தி ஃபேமிலி மேன் 2 ஜூன் 4 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்புடன் தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடரின் டிரெய்லரும் நேற்று வெளியானது.
இந்நிலையில் தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடரில் சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரம் பற்றி இயக்குநர்கள் ராஜ் & டிகே கூறியதாவது:
சமந்தா இதற்கு முன்பு செய்த கதாபாத்திரங்களுக்கு முற்றிலும் மாறான வேடத்தில் நடித்துள்ளார். அதனால் தி ஃபேமிலி மேன் இணையத் தொடருக்குப் புதிய தோற்றத்தை அவர் அளித்துள்ளார். மக்கள் எண்ணுவதை விடவும் வலுவான கதாபாத்திரம் அவருடையது. கதைக்குத் தேவையான அழுத்தத்தை அக்கதாபாத்திரம் அளித்துள்ளது என்று கூறியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.