‘குணா': மனிதர் உணர்ந்து கொள்ள முடியாத காதல் கதை

மூன்று தசாப்தம் கடந்தும் அனைவராலும் கொண்டாடப்பட்டு வரும் சினிமாவின் தாஜ்மஹாலாக திகழ்கிறது கமலஹாசனின் ‘குணா’.
‘குணா': மனிதர் உணர்ந்து கொள்ள முடியாத காதல் கதை

மூன்று தசாப்தம் கடந்தும் அனைவராலும் கொண்டாடப்பட்டு வரும் சினிமாவின் தாஜ்மஹாலாக திகழ்கிறது கமலஹாசனின் ‘குணா’.

இந்திய சினிமாவின் வருங்காலத்தை யோசித்து நடிப்பதாலோ என்னவோ, கமல்ஹாசனின் பல திரைப்படங்கள் வெளியாகும்போது வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும், பிற்காலங்களில் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன. அந்த வரிசையில் 'குணா' திரைப்படம் தவிர்க்க முடியாத ஒன்று.

திரைப்படங்களை எடுக்கும் ஒவ்வொருவரும் உலகம் முழுவதும் பிரபலமான இடங்களுக்கு சென்று படம் எடுப்பார்கள். ஆனால் படம் எடுத்த பகுதி பிரபலமானதே படத்தின் வெற்றிக்கான சான்றாக அமைந்துள்ளது.

கடந்த 1991ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாப் ஜான் மற்றும் பாலகுமரன் எழுதிய கதையில் சந்தானபாரதி இயக்கத்தில் கமலஹாசன், ரேகா, ரோஷினி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம்தான் 'குணா'. முதலில், இப்படத்திற்கு 'மதிகெட்டான் சோலை' எனப் பெயரிடப்பட்டு பின்னர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவருக்கும், பணக்காரப் பெண்ணிற்கும் இடையே உருவான காதல் குறித்த படம். இப்படத்தில், இளையராஜா இசையில் வெளியான ‘கண்மணி அன்போடு காதலன்’, ’உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார்?’ உள்ளிட்ட பாடல்கள் இன்றும் ஒலித்துக் கொண்டுள்ளன.

படத்தின் தொடக்கத்திலேயே தான் பார்க்கும் பெண்களை தனது கற்பனை காதலி அபிராமியாக நினைத்துக் கொண்டு அவரிடம் பேசி அடிவாங்குவார் மனநிலை பாதிக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள கமலஹாசன். பின், மனநலக் காப்பகத்திலிருந்து வெளியே வரும் கமலை அவரது தாய் ஒரு காட்சியில் கோபமாக திட்டுவார். அப்போது, அவர் ஒரு கல்லை எடுத்து தன் தாய் மேல் போடச் செல்வார். பின், அந்த கல்லை தன் மார்பு மீது இடித்துக் கொண்டு அழும் காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துவிடும்.

இதைத் தொடர்ந்து, குணாவின் மனநல பாதிப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சித்தப்பா கதாபாத்திரத்தில் வரும் ஜனகராஜ், கோயில் நகைகளை திருட திட்டம் தீட்டுவார். அந்த கோயிலில் கதாநாயகி ரோஷினியை காணும் குணா, தனது கற்பனை காதலி அபிராமி என நினைத்து அவரைக் கடத்துகிறார்.

கடத்தி செல்லும் ரோஷினியை, கொடைக்கானல் உச்சியில் இருக்கும் ஓர் பாழடைந்த கட்டடத்தில் யாருக்கும் தெரியாமல் தங்க வைக்கிறார். அங்கு, ரோஷினியை தேடி அவரின் உறவினர் வருகிறார். அவர், சொத்துக்காக ரோஷினியை கொல்ல முயற்சிக்கிறார். அவரிடமிருந்து காப்பாற்றுகிறார் குணா. தனது பெற்றோரை இழந்த கதாநாயகியின் உறுப்பினர்களும் போலியாக இருப்பதை அறிந்த அவருக்கு உண்மையான அன்புடைய குணாவை காதலிக்கத் தொடங்குகிறார்.

பின், அங்கிருந்து கதாநாயகியை பாதுகாக்க ஒரு பள்ளத்தாக்கிற்கு கூட்டிச் செல்கிறார் குணா. தொடர்ந்து ரோஷினியை தேடும் காவல்துறையினர் அவர்களை பிரித்தனரா? அல்லது அவர்கள் தடையை மீறி ஒன்று சேர்வார்களா? என்பதே படத்தின் கதை.

மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் கடவுளுக்கு நிகராகவே கமலை இதில் பொருத்திப் பார்க்கலாம். நாயகியுடன் சேர்ந்து வாழமுடியாது அமரத்துவம் எய்தி கடவுளாகவே மாறியிருப்பர். மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல என்ற கவிதை வரியை படம் பூர்த்தி செய்து நிறைவடைவது பரிபூரணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com